டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர், மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் 1891, ஏப்ரல் 14ல் ராம்ஜி – பீமாபாய் தம்பதிக்கு 14வது குழந்தையாகப் பிறந்தார். ‘மகர்’ என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர்,  இளம்வயதில் பல்வேறு துன்பம், துயரங்களை அனுபவித்தார். ஆரம்பப் பள்ளியில் பயின்றபோது தனக்கு உதவிய மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியரின்மீது ஏற்பட்ட பற்றால், தனது பெயரை ‘பீமாராவ் அம்பேத்கர்’ என்று மாற்றிக் கொண்டார். மெட்ரிக் படிப்பை முடித்த அம்பேத்கர் தன்னைப் படிக்க வைத்த பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே ராணுவ செயலாளராக 18 மாதங்கள் பணிபுரிந்தார்.

தேச விடுதலைப் போராட்டத்தில் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதேசமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அங்கீகாரம் அதிகாரம் கிடைக்க போராடினார். ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’யை 1936ல் நிறுவி தேர்தலில் போட்டியிட்டு, சட்டசபைக்கு 15 உறுப்பினர்களை அனுப்பினார். பின்னாளில் அவர் ‘இந்திய குடியரசுக் கட்சி’யையும் நிறுவனார்.

பாரத விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டார். தனது அபார முயற்சியால் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கினார்.  1951ல் ஹிந்து சட்டத் தொகுப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது நேருவுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடிக் களைத்த நிலையில், ஹிந்து சமயத்தின் பழமைவாதிகளுக்கு எதிராக, ஹிந்து மத்த்தின் ஒரு பிரிவான புத்த மதத்தைத் தழுவப்போவதாக அறிவித்தார். அதன்படி, நாகபுரியில் 1956, அக்.14ல் நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பெளத்த மதத்திற்கு மாறினார்.

சமூகநீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர்  1956 டிச. 6ல் காலமானார். அவருக்கு 1990ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கி பாரத அரசு பெருமை பெற்றது. ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளியாக விளங்கிய அம்பேத்கர், சிறந்த சமூக சீர்திருத்தச் செம்மலாகப் போற்றப்படுகிறார்.

அம்பேத்கர் பிறந்த நாள் இன்று