பாகிஸ்தான் சீனாவில் படிக்க வேண்டாம்

பல்கலைக்கழக மானியக் குழுவும் (யு.ஜி.சி) அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் (ஏ.ஐ.சி.டி.இ) பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் வேலை வாய்ப்புகளை வழங்க அனுமதிக்காது. பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் இந்தியாவில் வேலை தேடுவதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள். இருப்பினும், புலம்பெயர்ந்தோர் மற்றும் பாகிஸ்தானில் உயர்கல்வி பட்டம் பெற்ற, இந்திய அரசால் குடியுரிமை வழங்கப் பெற்றவர்களின் குழந்தைகள் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியைப் பெற்ற பிறகு இந்தியாவில் வேலை தேட தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும், மாணவர்களின் உயர் கல்விக்காக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளன.

சீனாவில் படிக்கக் கூடாது என இந்திய மாணவர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ எச்சரிக்கை விடுத்த ஒரு மாதத்திற்குள் யு.ஜி.சி மற்றும் ஏ.ஐ.சி.டி.இ இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஏ.ஐ.சி.டி.இ தலைவர் அனில் சஹஸ்ரபுதே, இந்திய பெற்றோர் இந்நாடுகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி படிக்க அனுப்பிவைத்து தங்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார். இந்திய மாணவர்களின் நலன் கருதி இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக கூறிய யு.ஜி.சி தலைவர் எம். ஜெகதேஷ் குமார், ரஷ்யா உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் சமீபத்திய உதாரணத்தை மேற்கோள் காட்டி, இந்தியாவில் படிக்க விரும்புமாறு மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.