தி.மு.க சிவராத்திரி விழாவா?

தமிழக அரசின் ஹிந்து அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஒரு சில நாட்களுக்கு முன், தமிழக அரசின் சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் விளையாட்டு மைதானத்தில் சிவராத்திரி விழா நடத்தப்படும். இது தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் முதல் சிவராத்திரி விழா என அறிவித்திருந்தார். அப்போதே ‘சோழியான் குடுமி சும்மா ஆடுமா?’ என ஹிந்துக்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்தது என்னவோ உண்மைதான்.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சமீபத்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களில் பா.ஜ.க பெற்ற வாக்கு எண்ணிக்கை அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து வாக்குகள் தங்களின் கையை விட்டுப் போவது அவர்களுக்கு புரிந்துள்ளது. அதனை சரி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக இது இருக்கலாம். அடுத்ததாக, ஹிந்துக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை நேரடியாக அவர்களால் சிதைக்க முடியாது என்பதால், ‘பகையாளி குடியை உறவாடி கெடு’ என்ற பழமொழிக்கேற்ப தி.மு.க, சிறுபான்மை அமைப்புகளுடன் இணைந்து பல ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் செயல்படுத்தி வரும் கலாச்சார அழிப்புத் திட்டங்களில் இந்த சிவராத்திரி திட்டமும் ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகமும் மக்களிடம் எழுந்துள்ளது.

மூன்றாவதாக, கடந்த சில ஆண்டுகளாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், மிகப் பிரம்மாண்டமாக நடத்தி வரும் உலகப் புகழ் பெற்ற சிவராத்திரி விழாவை சீர்குலைக்கும் சிறுபான்மை மதமாற்ற கும்பலின் எண்ணத்தை செயல்படுத்தும் திட்டமாகவும் இது இருக்கலாம். இந்நிலையில், இந்த சந்தேகங்களை மெய்ப்படுத்தும் விதமாக, ஹிந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள சிவராத்திரி அழைப்பிதழில், கருணாநிதி, ஸ்டாலின், சேகர் பாபு, தேச மங்கையர்க்கரசி, விஜய் டி.வி பாடகர்கள் என பலரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், சிவராத்திரியின் நாயகனான சிவனின் படம் பெரிதாக இடம் பெறவில்லை. சிவலிங்கத்தின் படம் ஒன்று, உற்று நோக்கினால் மட்டுமே தெரியும் விதத்தில், பின்புலத்தில் மிக மெல்லியதாக அமைக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழிலேயே இந்த குளறுபடி என்றால், நேரில் எப்படி இருக்குமோ? இது என்ன தி.மு.க நடத்தும் சிவராத்திரியா அல்லது ஹிந்து சமய அறநிலையத்துறை நடத்தும் சிவராத்திரி விழாவா? இவர்கள் மாறவே மாட்டார்களா? என மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

மதிமுகன்