திசை திருப்பும் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வு, பாரத் பயோடெக் மருந்து உற்பத்தி உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் மூன்று நாள் போராட்டத்திற்கு அழைப்பை விடுத்துள்ளனர். அது குறித்து பொதுமக்கள் சார்பில் அவர்களுக்கு சில கேள்விகள்…

பெட்ரோல் விலை: கலால் வரியை குறைக்க சொல்லி மத்திய அரசை குறை கூறும் இவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம், ஜி.எஸ்.டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வருவோம் என கூறி ஆட்சிக்கு வந்த, தங்கள் கூட்டணியின் தலைமையான தி.மு.கவை கேள்வி கேட்க இவர்களுக்கு துணிவு உள்ளதா?

தடுப்பூசி தயாரிப்பு: செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோ டெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் வழங்க வேண்டும் என கூறும் இவர்கள், அங்கு மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கு எங்கு போவார்கள், தடுப்பு மருந்து உற்பத்தி தொழில் நுட்பத்திற்கு, தொழில் நுட்பப் பணியாளர்களுக்கு யாரிடம் கையேந்துவார்கள், அதற்கான செலவினங்களுக்கு எங்கு போய் நிற்பார்கள், அதனை எப்படி வினியோகிப்பார்கள் என தங்கள் தலைமையை கேட்க முடியுமா?

விலை ஏற்றம்: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசை கோரும் ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள இவர்கள், அந்த கடமையை செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கையில்தான் உள்ளது என்பதை வசதியாக மறந்துவிட்டு மத்திய அரசை விமர்சிக்கின்றனர். இது முறையா, விலை ஏற்றம் மீது தி.மு.க அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்று ஸ்டாலினை கேட்பார்களா இவர்கள்?

நிவாரண உதவி: வாழ்வாதரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7,500/- வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் வி.சி.கவினரும், கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைத்த ஸ்டாலின் தற்போது முதல்வராக பதவி ஏற்ற நிலையில் அதனை செயல்படுத்துவாரா, கொரோனா காலத்தில் டாஸ்மாக் திறக்கக்கூடாது என போராட்டம் நடத்திய ஸ்டாலின் குடும்பம், அவசர அவசரமாக டாஸ்மாக்கை திறந்தது ஏன் என கேள்வி கேட்பார்களா?

கொரோனா மருந்து: கொரோனா தடுப்பு மருந்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுத்து, நியாய விலையில் மக்களுக்கு மருந்துகள் தட்டுபாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் இவர்கள், அந்த பொறுப்பு யாரிடம் உள்ளது, யார் அதனை செயல்படுத்த வேண்டும், காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற அரசியல் அமைப்பின் அடிப்படையை அறிவார்களா?

ஆட்சியில் அமர வேண்டி தாங்கள் இஷ்டத்துக்கும் அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், தனது தோல்வியை மறைக்க போராடும் தி.மு.க அரசு, தங்கள் கூட்டணியினரை வைத்து இது போன்ற வெற்று போராட்டங்களை நடத்த சொல்லியும், ஒன்றியம், அணில், ஜெய் ஹிந்த் என மக்களின் கவனத்தை திசை திருப்பியும் ஐந்தாண்டு கால ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைப்பதே இந்த போராட்டங்களின் நோக்கம் என்பது மக்களுக்கு புரியாமல் இல்லை.

மதிமுகன்