கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி பயன்படுத்தும் புதிய யுக்தியை பாரத விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான ஆராய்ச்சியில் கார்பனை உறிஞ்சி பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. இதில் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்கனவே செய்து காட்டப்பட்டிருந்தாலும், எந்தத் தொழில்நுட்பமும் , கார்பனை முற்றிலும் அகற்றும், குறைந்த செலவிலான தீர்வை அளிக்கவில்லை. ஆகையால், புதிய திட உறிஞ்சிகள் பற்றிய ஆராய்ச்சி, கார்பன்டை ஆக்சைடு உறிஞ்சப் பயன்படுத்தும் முக்கியமான பொருளை வழங்கும். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உதவியுடன், கொல்கத்தாவில் உள்ள அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியர் ராகுல் பானர்ஜி குழு புத்தாக்க திட்டத்தின் கீழ், இந்த புதிய திட உறிஞ்சி யுக்தியைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் கண்டறிந்துள்ள சிறப்பு வகை நேனோ துகள்கள் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும். இந்தப் புதிய வகை பொருட்களின் இயற்பியல் பண்புகள் குறித்து ‘அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.