தீரன் சின்னமலை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் தீரன் சின்னமலை பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். தீர்த்தகிரி, இளவயதிலேயே போர்ப் பயிற்சியை கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூர் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற தண்டல்காரரிடம், ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று சொல்லி அனுப்பினார். அது முதல் தீர்த்தகிரி சின்னமலையானார்.

பாரதத்தில் வியாபாரம் செய்ய ஆங்கிலேயர்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க விரும்பிய சின்னமலை, இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் தடையாகச் விளங்கினார். ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

நான்காம் மைசூர்ப் போரில் திப்பு சுல்தான் இறந்துவிட, சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயாரானார். சிவன்மலை, பட்டாலிக் காட்டில் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். சின்னமலையின் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் என பலரும் இருந்தனர்.

1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடனான போர்களில் சின்னமலை வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்றுணர்ந்த ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர்.

தீரன் சின்னமலையின் பிறந்த தினம் இன்று