மத்திய அரசு சட்டம் அசிங்கத்திற்கு அணை!

கடந்த வாரம் சில திரைத்துறை புள்ளிகள் எதிர்த்தார்களே, அந்த மாதிரி வரைவு திரைப்பட திருத்த சட்டம் என்ன சொல்கிறது?
1. புதிய சினிமா படங்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் மிக கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரும்.
2. திரைப்பட சான்றிதழ் வழங்கும்போது வெறுமனே U/A என்று வழங்காமல் U/A 7+, U/A 13+, U/A 16+ என்று வழங்கப்படும்.
3. இப்போது போல திரைப்பட சான்றிதழ் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கவேண்டும் என்றில்லாமல் ஒரு சான்றிதழ் முறை வழங்கிவிட்டால் அது காலத்துக்கும் செல்லும்.
4. முன்பு தணிக்கை அதிகாரி ஒரு சான்றிதழ் வழங்கிவிட்டால் அதை மாற்றி வழங்கவேண்டும் என்ற அசாதாரண நிலை வந்தால் அதை மத்திய அரசின் துறை தலையிட வேண்டும் என்று இருந்தது. இனி, அந்த வேலையை தணிக்கை அதிகாரியே பார்ப்பார்.
5. கதை திருட்டு நடந்தால் தண்டனை உண்டு.

மேற்கண்ட திருத்தங்களில் என்ன பிரச்சனை?
தணிக்கை சட்டங்கள் பல இருந்தாலும், சுவாரஸ்யமான, தேவையானவற்றை மட்டும் பார்க்கலாம். (முன்குறிப்பு: இவை எல்லாமே சட்டப்புத்தகத்தில் இருப்பவை. தமிழாக்கம் செய்து தரப்பட்டுள்ளது.) இதெல்லாம் இருந்துமா இவ்வளவு கேவலமாக படங்கள் எடுக்கிறார்கள் என்று வியக்காதீர்கள்.

தணிக்கைத் துறையின் கொள்கை
கலைஞர்களின் எண்ணப் பிரதிபலிப்பு, கருத்து சுதந்திரம் குலைக்கப்படக்கூடாது என்பது முக்கியமாக இருந்தா
லும், சமுதாய விஷயங்களை பிரதிபலிக்கும் விஷயமாக திரைப்படம் இருந்தாலும், சமுதாயத்தின் நெறிகளை, எண்ணங்களை மதிப்பதே முக்கியமாக இருக்கவேண்டும். சமுதாய மாற்றத்துக்கு ஏற்ப தணிக்கையும் மாறும். திரைப்படங்கள் தெளிவான, ஆரோக்கியமான பொழுதுபோக்காக, முடிந்தவரை நல்ல தரமாக இருக்கவேண்டும்.அதனால், சமூக விரோத செயல்களை நியாயப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது, குற்றவாளிகளின் செயல்முறையை விரிவாக சித்தரிக்க கூடாது, குற்றம் செய்யதூண்டும் வகையில் செயலோ, சொல்லோ இருக்ககூடாது, காண்பிக்கவும் கூடாது. குழந்தைகளை, சிறுவர்களை வன்முறைக்குத் தூண்டும் விதமாக, சாட்சியாக ஆக்கக்கூடாது. சிறுவர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதுபோல எதுவும் காண்பிக்கக் கூடாது.

மாற்றுத் திறனாளிகள், மூளை வளர்ச்சியற்றவர்களை திட்டுவதுபோல, கிண்டல் செய்வதுபோல, கொடுமைப்படுத்துவது போல காண்பிக்க கூடாது. மிருகங்களை கொடுமைப்படுத்துவதுபோல காட்டக்கூடாது. தேவையில்லாத வன்முறை, கொடூரம், பயங்கரம் நிறைந்த காட்சிகள் எல்லாம் பார்ப்பவர் மனதில் மனித தன்மையை இல்லாமல் செய்துவிடுகிறது. அதுபோலவும் இருக்கக்கூடாது. குடி, புகைப்பது, புகையிலை, போதை மருந்து, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், பாலுணர்வைத் தூண்டும் வார்த்தைகள், எந்த வகையிலும் பெண்களை அவமரியாதை செய்யும் காட்சிகள் இருக்கக் கூடாது. இந்திய இறையாண்மையை கேள்வி கேட்கும் விதமாக, நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் விதமாக, அண்டை நாடுகளின் உறவை பாதிக்கும் விதமாக, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதமாக, நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக இருக்கக் கூடாது.

நம் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது திரைப்படத்துக்கும் பொருந்தும். இந்தத் தணிக்கை சமாச்சாரம் பிலிம்ஸ் டிவிஷன் எனும் அரசுப் பிரிவையும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி துறைக்கும் மட்டும் பொருந்தாது. காரணம், அவர்கள் அறிவை புகட்டவும், தகவல் தெரிவிக்கவும் மட்டுமே தங்கள் ஊடகத்தை பயன்படுத்துகிறார்கள். சினிமாவுக்கும், ஊடகத்துக்கு தனியாக அரசியலமைப்பு சட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லையென்றாலும் கருத்து தெரிவிப்பது என்பது பேச்சு, எழுத்து, அச்சு, படம் என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும். அப்படியென்றால் அது சினிமாவுக்கும் பொருந்துகிறது.

இந்த உரிமையை சட்டம் 19(2)இன் கீழ், வரையறுக்கப்பட்ட சுதந்திரம் என்று பொருள் கொண்டு மேலே கூறப்பட்ட எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாவண்ணம் நடத்துவது தணிக்கை துறையின் கடமையாகும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமுதாய சிந்தனைக்கு ஊறு விளைவிக்காமலும், அதே சமயம் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் சமுதாயத்தில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்பதையும் கருதி, அவரவர்கள் தங்களுக்குள்ள பொறுப்புகளை உணர்ந்து செய்திகள், பொழுதுபோக்குகள், கல்வி என்று எதுவாக இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், திரை ஊடகம் எல்லாமே சமதர்ம மனோபாவத்துடன் நடந்து சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது கடமையாகிறது. இத்துடன் சட்ட விளக்கம் நிறைந்தது.

இன்னொரு வேடிக்கை. இந்த தணிக்கை தூர்தர்ஷனுக்கும், ஆவணப்படங்கள் எடுக்கும் ஃபிலிம்ஸ் டிவிஷன்துறைக்கும் மட்டுமே கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால், இயற்கையாகவே மற்ற தொலைக்காட்சிகள், ஓடிடி உட்பட அனைவரும் தங்கள் தொடர்களை, திரைப்படங்களை, விளம்பரங்களை, செய்திகளை தணிக்கை செய்த பின்னரே வெளியிடவேண்டும் எனும் பொருள் பொதிந்துள்ளது
தானே?
சில மாதங்கள் முன் ஒரு தொலைக்காட்சியில் வன்புணர்வு செய்யும் திட்டத்தை விவரமாக காட்டியதற்காக தண்டனை பெற்றார்கள். போட்டி நடன நிகழ்ச்சி என்று கூறி ஆபாசமான நடன நிகழ்ச்சிகளை ஆண்டுக்கணக்கில் நடத்துகிறது இன்னொரு தொலைக்காட்சி. ஹிந்து மதத்தை சாடுவதற்கு, கொரோனா தடுப்பூசியில் உளவு பார்க்கும் சிப் உள்ளது, சாத்தானின் மருந்து அது என்று சொல்லி குழப்ப ஒரு டிவி என்று தேச விரோதிகளின் கொட்டம் தொடர்கிறது. ஏற்கனவே இருக்கும் சட்டத்தின் ஷரத்துகளை காட்டி ஏன் தணிக்கைக்கு உட்படுத்தக் கூடாது இவர்களை என்று அரசாங்கமல்லவா மாற்றி கேட்கவேண்டும்?

தமிழ்ராக்கர்ஸ் போன்றவர்கள், நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று புலம்புகிறார்கள். இனி அந்த அமைப்புகள் திருடினால் சட்டத்தில் சிக்குவார்கள். பல கோடிகள் தண்டம் கட்டவேண்டும். சிறைசெல்லவேண்டும். இதற்குத்தானே இத்தனை நாள் வேண்டினார்கள்? சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் எதற்கு எதிர்க்க வேண்டும்?படிக்கக் கற்றுக்கொண்டு படித்துவிட்டுப் பேசுங்கள் போராளிகளே.

குப்பைகளை அகற்றும் திருத்தச் சட்டம்
ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தை நான் வரவேற்கிறேன். இந்தச் சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் தமிழ் சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந் திருக்கும். நமது கலாச்சாரத்தைக் கிண்டல் செய்தல், நல்ல சட்டங்களை கொச்சைப் படுத்துதல், ஆபாச காட்சிகளில் அத்துமீறல், இளைஞர்களைச் சீரழிக்கும் நகைச்சுவை ஆகியவைதான் கருத்து சுதந்திரம் என்று கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகிலிருந்து வெளிப்படுகின்றன. இது ஒருபுறமிருக்கட்டும்.

கால் நூற்றாண்டுக்கு முன் ’பசி’, ’முதல் மரியாதை’, ’உதிரிப்பூக்கள்’, ’முள்ளும் மலரும்’, ’ஆறிலிருந்து அறுபதுவரை’, ’ஸ்ரீ ராகவேந்திரர்’, ’வேதம் புதிது’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ’கருத்தம்மா’, ’ரோஜா’,’ ரமணா’ போன்ற தரமான படங்களைத் தந்த தமிழ் திரையுலகம் இப்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தங்கர்பச்சானின் ’அழகி’, ‘பள்ளிக்கூடம்’ போன்ற அருமையான படங்களை மக்கள் கொண்டாடவில்லையா? இப்போது திருத்தச் சட்ட வரைவை எதிர்ப்பவர்கள், பார்க்கவே கூசும் வசனங்கள், காட்சிகளுடன் திரைப்படங்கள் வந்தபோது எங்கே போனார்கள்? இந்தக் குப்பைகளை அகற்றவே ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதா தேவைப்படுகிறது.

பலதரப்பு மக்களையும் கலாச்சாரங்களையும் கடைப்பிடிக்கும் பாரம்பரிய தேசம் பாரதம். இதைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு கலைஞனுக்கும், படைப்பாளிக்கும் உண்டு. சமூகம் சார்ந்த, குடும்ப பாங்கான கதைகள் இந்தத் தேசத்தில் கொட்டிக் கிடைக்கின்றன. அதைத் தவிர்த்து, சமீப கால தமிழ்ப் படங்கள் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயல்கின்றன. சிலர் நாகூசும் வசனங்களையும். மரபு மீறும் கதைக்களத்தையும் கருத்து சுதந்திரமென்றால் அவர்களின் படைப்புகளும் குப்பைகளே. அதைச் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். சட்டம் யாருடைய குரல்வளையையும் நெறிப்பதில்லை, அதே நேரத்தில் நெறி தவறினால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
-இயக்குநர் சத்தியபதி

நடைமுறையில் இருக்கும் சென்சார் சட்டங்கள்
1. படத்தை தணிக்கைக்கு சமர்ப்பித்த பின்னர் யாரும்தணிக்கை அதிகாரியை, அணுக கூடாது,
2. சமூக விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்தக்கூடாது.
3. குடிப்பது, புகைப்பது போன்ற காட்சிகள் மொத்தமாகதடை செய்யப்பட்டுள்ளன.
4. பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது போன்றகாட்சிகள், படத்துக்கு மிக அத்தியாவசியமாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். மிககுறுகிய அளவில், விவரமாக இல்லாமல் இருக்கவேண்டும்.
5. ஜாதி, மத நல்லிணக்கத்தை குலைக்கும், அறிவுபூர்வமாக இல்லாத, விஞ்ஞானத்துக்குவிரோதமான, தேச விரோதமான காட்சிகள் காண்பிக்கப்படவே கூடாது.
6. அசோக சக்கரம், தேசிய கொடி போல தேசத்தின் குறியீடுகளை தவறாக பயன்படுத்த கூடாது.
7. ஆபாச சுவரொட்டிகள் கூடாது. இது இந்திய தண்டனை சட்டம் 292 ன் கீழ் தண்டனைக்குரியது.
8. ‘S’ சான்றிதழ் விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்குமான பிரத்யேக படம்.
(ஒரு படத்தை தணிக்கை செய்யும்போது மொத்தமாக அது விளைவிக்க கூடிய தாக்கம், எந்த காலகட்டத்தை படத்தில் காட்டுகிறோம், எந்த காலகட்டத்தில் பார்க்கப்படுகிறது, நாட்டின் எந்த பகுதியில் பார்க்கப்படும், அந்தந்த இடத்தின் தன்மை என்ன, மக்களின் அறநெறிகளை பாதிக்கும் வகையில் இல்லாமல் இருக்கிறதா, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கிறதா என்று கவனிக்கப்படும். இது படத்தின் தலைப்புக்கும் பொருந்தும்).
-ஆனந்த் வெங்கட்