கண்ணைத் திறந்தபடி கிணற்றில் விழும் கலை!

அரசு அலுவலகங்களில் உதவியாளர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இதுபோன்ற முதன்மைப் பணிகளுக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளைச் செய்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC). பொதுமக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு உள்ள இப்படிப்பட்ட முக்கியமான அரசு அதிகாரிகளை நியமிக்கும் ஆணையத்தில் உறுப்பினராக கிறிஸ்தவ பாதிரி ராஜ் மரிய சூசை என்பவரை நியமித்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது திமுக அரசு.

பொதுமக்களையும் போலீஸ்காரர்களையும் கொன்று குவித்து ஊரில் ஆதிக்கம் பெற முயற்சி செய்யும் மாவோயிஸ்ட், நக்சலைட் கும்பல்களுக்கு ஆதரவானவரும் பாரதப் பிரதமரை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவரும் ஆன ஸ்டான் சுவாமி என்ற இன்னொரு பாதிரியின் நினைவாக ஜூலை 6 அன்று ஏற்காடு பகுதியில் நிகழ்ச்சிகள் நடத்திய சலேஷியன் திருச்சபை பாதிரி தான் இந்த மரிய சூசை.

சரியாக ஒரு மாதம் முன்பு (ஜூன் 15 அன்று) தமிழகத்தின் வனப்பகுதியில் பத்து காவல் நிலையங்களுக்கு நக்சலைட் கும்பல்களால் ஆபத்து என்ற உளவுத்துறை தகவலின் பேரில் கமாண்டோ படை கொண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்தது தமிழக காவல் துறை. தமிழகத்தின் இன்னொரு வனப் பகுதியான ஏற்காடு வட்டாரத்தில் செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருக்கும் (ஸ்டான் சுவாமி ஆதரவாளரான) ஒருவரை எந்த பின்விளைவு பற்றியும் யோசிக்காமல் அரசாங்க முதன்மை அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் உள்ள சபையில் உறுப்பினராக நியமித்து அழகு பார்க்கிறது திமுக அரசு.

போன வாரம் பாட நூல் கழகத்திற்கு தலைவராக சர்ச்சைக்குரிய ஐ. லியோனியை நியமித்து திமுக அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளான சம்பவம் நடந்தது. அது போல பலமடங்கு அபாயகரமானது மரிய சூசை நியமனம். எப்படிப்பட்ட சென்சிட்டிவான பதவிகளுக்கு தேர்வாணையம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது என்பதை மக்கள் உணர்ந்து திடுக்கிட முதல் பாராவில் உள்ள பதவிகள் பட்டியல் போதுமானது.

8 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் 88 சதவீதம் பேர் ஹிந்துக்கள் இருக்கும்போது அதிமுக்கியமான அமைப்புகளில் நியமிக்க ஹிந்துக்களே கிடைக்கவில்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் திமுக அரசு தப்ப நினைக்கலாம். இவர்களைப் போல பயங்கரவாதிகளின் தோழர்களையும் அப்பட்டமான காழ்ப்புணர்வு கொண்டவர்
களையும் தேடித்தேடி பதவி கொடுத்துவிட்டு நாளைக்கு விபரீதமான பின்விளைவு ஏற்படும்போது திமுக அரசு பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்பது மட்டும் உறுதி.