கொரோனா படுக்கை அவலங்கள்

சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் படுக்கை வசதியில்லாததால், ஆம்புலன்சிலேயே 6 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றிற்கு ஆளாகின்றனர். சென்னையில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. படுக்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரு தினங்களில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வேறு காரணங்களால் இறந்துவிட்டதாக மருர்த்துவர்கள் பொய்யான சான்று அளிப்பதாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பரவலுக்கு ஏற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. கொரோனாவை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள பொதுமுடக்கமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இவை யாவும் தமிழக அரசு நிலமையின் தீவிரத்தை உணராமல் மெத்தனமாகவே செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது.