வயலூர் கோயிலில் சர்ச்சை

திருச்சி மாவட்டம், வயலுார் முருகன் கோயிலில், தலைமுறை தலைமுறையாக வேதம் படித்து கருவறைக்குள் முருகனை தொட்டு பூஜை செய்துவரும் சில அர்ச்சகர்கள் உள்ளனர். இது நாள்வரை இந்த பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வந்தது. தமிழகத்தை ஆட்சி செய்யும் தி.மு.க, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. குறுகிய கால அர்ச்சகர் படிப்பு முடித்த தனபால், பிரபு ஆகியோரை இக்கோயிலில் அர்ச்சகர்களாக்கியது.

புதிதாக நியமிக்கப்பட்ட இவர்கள் கோயில் கருவறைக்குள் சென்று மூலவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என இடதுசாரி அமைப்பான மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் கோயில் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தனர். கோயில் நிர்வாகமும் அவர்களை கருவறையில் பூஜை செய்ய அனுமதித்தது. பாரம்பரிய அர்ச்சகர்கள் இதனை எதிர்த்தனர். ம.க.இ.க அமைப்பினர் புதிய அர்ச்சகர்களை அர்ச்சனை செய்ய வைத்து கோஷமிட்டு கைதட்டினர். அப்போது ஒரு கிறிஸ்துவ பெண் ஒருவர் சம்பந்தமே இல்லாமல், ‘வாழ்க தமிழ்’ என்று கோஷமிட்டார்.

தகவல் அறிந்து வந்த பா.ஜ.கவினர், ‘கோயில் கருவறைக்குள் பூஜை, அர்ச்சனைகள் செய்ய பிரத்யேக சம்பிரதாயங்கள் உள்ளன. அதை உடைத்து பாரம்பரிய அர்ச்சகர்களை வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு தமிழக அரசு செய்யும் காரியங்களால் பல இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன’ என கூறினர்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் கோயில்களில் அக்கோயிலுக்கே உரித்தான பாரம்பரிய ஆகம நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதை அரசு உணர வேண்டும். கோயிலின் உள்ளே வந்த ஒரு கிறிஸ்தவ பெண், சம்பந்தமே இல்லாமல் ‘வாழ்க தமிழ்’ என கோஷம் எழுப்பியது ஏன்? ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிட இவர்கள் யார்? வழிபாட்டு உரிமை கோரிய இக்கும்பலில் ஒருவர்கூட கடவுளை வணங்கவோ, ஆராதனை தீபத்தை ஏற்கவோ, முருகனை வழிபடவோ இல்லை என்பது சற்றே சிந்திக்கத்தக்கது.

கிறிஸ்தவர்களின் சில குறிப்பிட்ட சர்ச்சுகளில் ஆங்கிலத்தில் மட்டுமே வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அனைத்து மசூதிகளிலும் வழிபாட்டுக்கு உருது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அங்கெல்லாம் இவர்கள் சென்று தமிழில் வழிபாடுகள் செய்ய வற்புறுத்துவார்களா அல்லது ‘வாழ்க தமிழ்’ என்று கோஷம் எழுப்புவார்களா? அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்; அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை எனும்போது, ஹிந்துக்களுக்கு என்று உள்ள தனிப்பட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்ற, தலையிட இவர்கள் யார்? நடுநிலை என கூறிக்கொள்ளும் தமிழக அரசு, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஹிந்து கோயில்கள் இடிப்பு, ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு, செயல்பாடுகள் என தொடர்ந்து செயல்படுவதுதான் தி.மு.கவின் திராவிட மாடல் ஆட்சியா என மக்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டனர்?

மதிமுகன்