உத்தரபிரதேசம் கோரக்பூர் கோயிலில் தாக்குதல் நடத்திய அகமது முர்தஜா அப்பாஸி என்பவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என்றும், அவர் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார் எனவும் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கூறியுள்ளனர். ‘அகமது முர்தஜாவிடம் இருந்து முக்கிய மின்னணு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவரது சமூகஊடகக் கணக்குகள், வங்கி கணக்குகள், மின்னணு பணப் பரிமாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவருடன் சமூக ஊடகத்தில் தொடர்பில் இருந்துள்ளார். பல பயங்கரவாத அமைப்புகளின் போதனைகளை கேட்டுள்ளார். ஜிஹாதி இலக்கியம், கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 2013ல் அன்சர் உல் தஹ்ஜித் என்ற பயங்கரவாத அமைப்பின் உறுதிமொழியையும் 2020ல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுதிமொழியையும் எடுத்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள ஆதரவாளர்களுக்கு ரூ. 8.5 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்காக ஆன்லைன் மூலம் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதை தெரிந்துகொண்டுள்ளார். கோரக்பூர் கோயிலில் காவலர்களிடம் இருந்து துப்பாக்கியை பறித்து மிகப்பெரிய தாக்குதலை நடத்துவது தான் இவரின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது’ என ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.