பா.ஜ.கவுக்கு வாக்களிக்க சர்ச் வேண்டுகோள்

கேரளா, ஆலப்புழா மாவட்டம் செப்பாட் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த தேவாலயத்தை இடிக்க முடிவு செய்தது. இதை இடிப்பதற்கு தேவாலய நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. உத்தரவை வாபஸ் பெற ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும் எதிர்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அக்கட்சிகள் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனை அறிந்த கேரள பா.ஜ.க தலைவர் ஆர்.பாலசங்கர், உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார். இதற்காக அவர் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து பேசினார். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் (ஏ.எஸ்.ஐ) தேவாலயத்தைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்தார். அவர்கள் தேவாலயத்தை பார்வையிட்டு இது ஆயிரம் ஆண்டு கால பழமையானது. தேசிய நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சான்றளித்தனர். இதனால் தேவாலயத்தை இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. ‘இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யார் யாரிடமோ நாங்கள் வேண்டுகோள் வைத்தோம். ஆனால் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் எங்களைக் கைவிட்டுவிட்டனர். ஆனால் பா.ஜ.க தலைவரான பாலசங்கர் உடனடியாக எங்களுக்கு உதவி செய்து தேவாலயம் இடிபடுவதைத் தவிர்த்தார். இந்த தேவாலயத்தைக் காப்பாற்றிய பாலசங்கருக்கு கடமைப்பட்டுள்ளோம். அவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் செங்கனூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிகிறோம். அவருக்கு கிறிஸ்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களிக்காமல் போனால் நாம் நன்றி மறந்தவர்களாகி விடுவோம்’ என்று மலங்கரா ஆர்த்தோடாக்ஸ் சிரியன் தேவாலயத்தின் தலைவர் பசிலியோஸ் மார்த்தோமா பவுலோஸ்-2 கேட்டுக்கொண்டுள்ளார்.