ஹிந்துக் குழந்தைகளுக்கு கிறிஸ்தவ பிரார்த்தனைகள்

மத்தியப் பிரதேசம், கட்னி மாவட்டத்தின் ஜின்ஜாரி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் குழந்தைகள் இல்லம், அதன் பள்ளியில் கிறிஸ்தவ பிரார்த்தனைகளை வாசிக்கும்படி குழந்தைகளை கட்டாயப்படுத்தியது. பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சமூகத்தைச் சேர்ந்த ஹிந்து குழந்தைகள் சார்பில் மிஷனரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. அவர்களின் புகாரின் அடிப்படையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணையை துவக்கியுள்ளது. என்.சி.பி.சி.ஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ தனது டுவிட்டரில், “மத்திய பிரதேசத்தின் கட்னியில் ஒரு மிஷனரி நடத்தும் குழந்தைகள் இல்லத்தை ஆய்வு செய்தபோது, ஹிந்து பட்டியல் சமூக, பழங்குடி சமூக குழந்தைகள் கிறிஸ்துவ மதத்திற்காக வலுக்கட்டாயமாக பிரார்த்தனை செய்ய வைக்கப்பட்டனர், மேலும் விதிகளின்படி குழந்தைகளுக்கு அவர்களின் பயன்பாட்டிற்கான பொருட்கள் வழங்கப்படவில்லை. குழந்தைகளின் ஆவணங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், உள்ளூர்  குழந்தைகள் நல குழு மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவும் குழந்தைகள் புகார் அளித்துள்ளனர். சிறப்பு காவல் பிரிவு, இதுகுறித்து குழந்தைகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இப்போது மாதவ் நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய நானே செல்கிறேன்” என்று கூறினார். தனது மற்றொரு டுவீட்டில், “சிறார் நீதி சட்டம் மற்றும் மத்திய பிரதேச மத சுதந்திர சட்டத்தின் கீழ் குழந்தைகள் இல்ல இயக்குனர் ஜெரால்டு அல்மேடா மற்றும் பிற குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும் ஏ.என்.ஐக்கு அவர் அளித்த பேட்டியில், “கட்னியில் உள்ள ஒரு மிஷனரி அமைப்பில் குழந்தைகள் கிறிஸ்தவ பிரார்த்தனைகளை கற்க வற்புறுத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறவும் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் குழந்தைகள் கூறியுள்ளனர். இதுகுறித்து மாதவ்நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வோம். இந்த விவகாரத்தில், குழந்தைகள் நலக் குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியின் பங்கும் சந்தேகத்திற்குரியதாக கண்டறியப்பட்டது, அது குறித்தும் விசாரணை நடத்துவோம். இன்று, நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளோம்” என்று கூறினார்.