தந்தி தொலைக்காட்சியில் தினமும் மாலை 6.40 இருந்து 6.55 வரை சி.எம்.ஜே செய்திகள் என பிரத்தியேக சீன செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதில், சீனக் கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல், ஆராய்ச்சிகள், கல்வி, விளையாட்டுகள், பொழுதுபோக்குகள் என பல்வேறு சீன செய்திகள் ஒலிபரப்பாகின்றன.
சீன விஷயங்களை நாம் ஏன் பார்க்க வேண்டும் அதற்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று யோசித்தால் இது சீனாவின் மிகப்பெரிய சதித் திட்டம் என தெரிய வரும். சீன அரசு, இங்கு மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த சதித் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடிகளை செலவிட்டு வருகிறது.
சி.எம்.ஜி என்ற சீன அரசு சார்பு நிறுவனம், பல்வேறு நாடுகளில் நன்கொடை செய்தி தொகுப்பு என்று ஊடகங்களில் உள்ளே நுழைந்து சமூக ஊடகங்களிலும் சில நபர்களை விளம்பர தூதராக நியமித்து சீன செய்திகளை உலாவர செய்கிறது. இது மக்கள் மீதான சீனாவின் ஒரு உளவியல் ரீதியான போர். மேலும், இதன் மூலம் வெளிநாட்டு ஊடகங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அந்த நாட்டு அரசுக்கு எதிராக திருப்பிவிடும் சூழ்ச்சியும் இதில் அடங்கி இருக்கிறது.
பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்களில் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் சீனா இந்த சதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே, சீன அரசின் இந்த முயற்சிகளை மத்திய அரசு முளையிலேயே கிள்ளி எறிவதுடன், இதுபோன்ற செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் சீனா தலையீடு
உலகெங்கிலும் உள்ள ஏராளமான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடக பயனாளர்களின் கணக்குகளில் சமீப காலமாக, சீனாவை சேர்ந்த சிலர் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்களுக்கு அந்த சீன கணக்குகளிலிருந்து பல்வேறு செய்திகளும், வீடியோக்களும் அனுப்பப்படுகின்றன. இதுகுறித்த ஸ்டான்போர்ட் இன்டர்நெட் அப்சர்வேட்டரி டுவிட்டர் குழு செய்த ஆய்வில், சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2,048 கணக்குகள், சின்ஜியாங் பிராந்திய அரசின் 112 கணக்குகள் இதனை பரப்புவது கண்டறியப்பட்டது.
இவை பெரும்பாலும் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, சீன அரசு ஊடகங்கள் போன்றவற்றால் தயாரித்து அளிக்கப்பட்ட செய்திகளையே வெளியிடுகின்றன. அவற்றில் சீனாவில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ளது, சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் நன்றாக நடத்தப்படுகின்றனர் என எடுத்துக்காட்டும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் எல்லை பிரச்சனைகள், உய்குர்கள் மீதான அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், ஹாங்காங் ஆக்கிரமிப்பு, ஊடகங்கள் மீதான அடக்குமுறை போன்றவை சர்வதேச அளவில் சீனாவின் பெயரை கெடுத்து வருவதால் அதனை சரிகட்டம் சீனாவின் முயற்சி இது என சமூக ஊடக பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதிமுகன்