பாரதத்தை பாராட்டிய சீனா

இந்திய பெருங்கடலில் சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமானார்கள். அவர்களில் 17 பேர் சீன பிரஜைகள், 17 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். மேலும் 5 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களாகும். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி துவங்கியது.  சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து சீன மீன்பிடிக் கப்பலை மீட்க இந்திய கடற்படை அதன் கடல் கண்காணிப்பு விமானமான பி8ஐ விமானத்தை அனுப்பியது. பாதகமான வானிலை இருந்தபோதிலும், விரிவான தேடுதல்களை மேற்கொண்ட இந்த விமானம், மூழ்கிய கப்பலுக்குச் சொந்தமான பல பொருட்களைக் முதலில் கண்டறிந்தது. இதற்கு சீனா நன்றி தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பாரதத்தைக் குறிப்பிட்டார். “ஆஸ்திரேலியா, பாரதம், இலங்கை, இந்தோனேஷியா, மாலிவ்ஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அவசரகால உதவிகளை வழங்கியுள்ளன மற்றும் சீன படகு மற்றும் பணியாளர்கள் முழுகியதற்கு அனுதாபங்களை தெரிவித்தன” என்றார். “உண்மையில் சரியான நேரத்தில் உதவியை பாராட்டுகிறோம்” என்று சீன தூதரகம் டுவீட் செய்தது. கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் சீனாவுடனான எல்லை பிரச்சினைக்கு மத்தியிலும் பாரதம் எப்போதும் பின்பற்றும் நமது பண்டைய பாரம்பரியத்தின்படி இந்திய கடற்படை உடனேயே மனிதாபிமான உதவிகளை வழங்கியது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்தது. பின்னர் இதில் ஆஸ்திரேலியா இலங்கை, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் பங்கெடுத்தன.