போராட்டத்தை தூண்டும் முதல்வர்

பொருளாதார அறிஞர் என கூறப்படும் இடதுசாரி சிந்தனையாளரான அமர்த்தியா சென் விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் 5,662 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அமர்த்தியா சென்னுக்கு விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் என அந்த மாநில முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி தனது கட்சியினரையும் ஆதரவாளர்களையும் தூண்டி வருகிறார். கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஃபர்கத் ஹக்கிம் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கு உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரும் எம்.எஸ்.எம்.இ துறை அமைச்சருமான சந்திரநாத் சின்ஹா தலைமை தாங்குவார் என தெரிவித்துள்ள மமதா, இந்த போராட்டத்தின்போது மத்திய பல்கலைக் கழக அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த புல்டோசர்களை அனுப்பி வைக்கலாம். அப்போதும் யாரும் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, விஸ்வ பாரதி நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கடந்த வாரம் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுக்குச் சொந்தமான விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் அமைந்துள்ள சாந்தி நிகேதன் பகுதியில் தனது தந்தை வாழ்ந்த வீட்டில் நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென் வாழ்ந்து வருகிறார். 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தால் அவரது தந்தைக்கு குத்தகைக்கு தான் கொடுக்கப்பட்டது. ஆனான், அதை ஒட்டிய 5,662 சதுர அடி நிலத்தையும் அமர்த்தியா சென் ஆக்கிரமித்துள்ளார். இந்த நிலம் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது என பல்கலைக் கழகம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த அமர்த்தியா சென், அந்த நிலம் தனது தந்தையால் வாங்கப்பட்டது என்றும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.