திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்களை இம்மாதம் 11 ஆம் தேதி இரவு முதல் ரத்து செய்ய இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசன டோக்கன்களை வாங்குவதற்காக அதிக அளவில் பக்தர்கள் திருப்பதிக்கு தினமும் வருகின்றனர். இது தவிர திருப்பதியிலும் கொரோனா பெரும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. எனவே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்குவது பற்றிய அறிவிப்பு, நிலைமை சீரான பின் வெளியிடப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் கொரோனா தொற்று பரவலை தடுத்து நிறுத்தும் வகையில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.