கால்வாய் மீட்புக் குழு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாளையத்தைச் சேர்ந்த, குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘ஆரணி தாலுகா, அடையாபுலம் கிராமத்தில், எனக்கு விவசாய நிலம் உள்ளது. காயப்பாக்கம் ஏரி தண்ணீரை நம்பி தான் விவசாயம் நடக்கிறது. காயப்பாக்கம் ஏரி கால்வாயை, நான் உட்பட 18 பேர் ஆக்கிரமித்துள்ளோம். கால்வாய்க்கான நீர் வரத்து, தண்ணீர் தேக்கி வைப்பதில் உள்ள தடைகளை உணர்ந்து, ஆக்கிரமிப்பு பகுதியை ஒப்படைக்க தயாராக உள்ளோம். ஒருவர் மட்டும் ஒப்படைக்க மறுத்து விட்டார். அவரை வெளியேற்றும்படி, அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’ என தெரிவித்துள்ளனர். இதனை விசாரித்த நீதிமன்றம், அறுவடையை முடித்த உடன் ஆக்கிரமிப்பு பகுதியை ஒப்படைக்க வேண்டும். இந்த கிராமம் மட்டுமல்ல; மாநிலம் முழுவதிலும் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளால், கால்வாய்கள் சுருங்குகின்றன. தண்ணீர் வரத்து தடுக்கப்படுகிறது. இதனால், விவசாயிகளால் பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாது. எனவே, கால்வாய்கள் மீட்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகளில் இருந்து தண்ணீர் வரத்துக் கால்வாய்களை மீட்க, அரசு, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். இந்தக் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு, வருவாய் ஆவணங்களில் உள்ளபடி கால்வாய்களை மீட்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.