சுவாமி சிலைகள் உடைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் அருகே துளசாபுரம் ஊராட்சியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. அதன் அருகிலேயே ஸ்ரீலட்சுமி அம்மன் கோயிலும் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டார பகுதியில் இரு நாட்களுக்கு முன் இரவில் கன மழை பெய்தது. அப்போது துளசாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் இந்த இரண்டு கோயில்களிலும் உள்ள சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். விநாயகர் கோயிலில் இருந்த முருகர், தட்சிணாமூர்த்தி, பார்வதி, துர்கை, நாகாத்தம்மன், நவகிரகங்கள், மூன்று சிறிய விநாயகர் உள்ளிட்ட சிலைகளையும் லட்சுமி அம்மன் கோயிலில் இருந்த இரண்டு துவாரபாலகிகள் சிலைகள் இரும்பு சூலம், சிங்க வாகனம் என 22 சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், விநாயகர் கோயிலில் மூலவர் சன்னிதி கதவை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்த பழைமையான மூலவர் சிலை சேதமின்றி தப்பியது. இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகம் முழுவதும் ஹிந்து கோயில்களை மட்டும் குறிவைத்து இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க அரசும் அதன் காவல்துறையும் இவற்றை தடுக்கவோ மர்ம நபர்களை கண்டுபிடித்து தண்டிக்கவோ முயற்சி எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றன, சில வழக்குகளில் மனநலம் பாதிக்கபட்டவர் உடைத்தார் எனகூறி வழக்கை முடித்து விடுகின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.