ரஷ்ய அழைப்பை ஏற்ற பாரதம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். பல சிக்கல்களுக்குப் பிறகு இடைக்கால அரசும் நிறுவப்பட்டுள்ளது. முன்னரே 1990களில் தலிபான்களின் அச்சம் தரும் ஆட்சியை அனுபவித்த அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டாலும், மக்கள் கேட்பதாக இல்லை. மற்றொருபுறம் அங்கு சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஷியா பிரிவினர் மசூதிகளில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்துகின்றனர். தலிபான்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் தஜிகிஸ்தானில் ரஷ்யா ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருவதுடன் அங்கு ராணுவத் தளவாடங்களையும் குவித்து வருகிறது. பாரதம் உட்பட ஆப்கனின் அண்டை நாடுகள் அனைத்தும் தலிபான்கள் விஷயத்தில் எச்சரிக்கை உணர்வுடனே செயல்படுகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வரும் அக்டோபர் 20ல் ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் சர்வதேசக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தலிபான்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுக்கவுள்ளது. இதில் பங்கேற்க பாரதத்திற்கும் ரஷ்யா சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதனை பாரதமும் ஏற்றுக்கொண்டுள்ளது.