ஆச்சரியமான பெண்மணி பண்டாரு அச்சமாம்பா

தெலுங்கில் முதல் சிறுகதையை எழுதி பிரசுரித்தவர் என்ற பெருமையோடு பெண்களின் முன்னேற்றத்திற்காக சங்கங்கள் அமைத்துப் பாடுபட்ட சிறப்பும் கொண்டவர் பண்டாரு அச்சமாம்பா என்ற பெண்மணி.பல துறைகளிலும் புகழ்பெற்ற பெண்களின் வரலாற்றைப் பல மொழிகளிலிருந்தும் சேகரித்து தெலுங்கில் 1903ல் ‘அபலா சத் சரித்திர ரத்னமாலா’ என்ற பிரம்மாண்ட நூலை எழுதி வெளியிட்டார்.

வேதம், புராணம், பௌத்தம் -இக்கால கட்டங்களில் சிறந்து விளங்கிய பெண்களின் வரலாறுகளை புத்தக வடிவில் தொகுத்தளிக்க வேண்டுமென்ற அவருடைய ஆவலை நிறைவேறவிடாமல் இளம் வயதிலேயே மரணம் அவரைக் கவர்ந்து சென்றது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களின் நிலைமையை முன்னேற்ற வேண்டுமென்று புதுமையான ஆலோசனைகளோடு சதா காலமும் பரிதவித்து, தன் வேதனைகளையும், கதைகளாக, கட்டுரைகளாக, வரலாற்று நவீனங்களாக சொற்பொழிவுகளாக வெளிப்படுத்திய ஆச்சரியமான பெண்மணி பண்டாரு அச்சமாம்பா.

அச்சமாம்பா 1874ம் ஆண்டு ஆந்திர பிரதேசம் கிருஷ்ணா ஜில்லாவில் ‘நந்திகாம’ என்னும் நகரின் அருகில் உள்ள ‘பெனுகன்சிப்ரோலு’ என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் ‘கொமர்ராஜு வெங்கட சுப்பையா’. தாயார் ‘கங்கமாம்பா’. தம்பிக்கு இரண்டு வயதும் அச்சமாம்பாவுக்கு ஆறு வயதும் இருக்கையில் அவருடைய தந்தை மரணமடைந்தார். அவளுடைய தம்பியை மட்டும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தனர். ஆனால் பெண் குழந்தையானதால் அச்சமாம்பாவைப் படிக்க வைக்கவில்லை. அச்சமாம்பாவுக்கு பத்து வயதில் தன் தாயின் சகோதரர் பண்டாரு மாதவராவுடன் திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்கு முன் அச்சமாம்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அச்சமாம்பா தன் தம்பியையும் உடனழைத்துக் கொண்டு நாக்பூரில் கணவருடன் வசிக்கத் தொடங்கினார்.

தினமும் தம்பி பள்ளி சென்று படித்து வந்த பின் வீட்டில் அவனுடன் அருகில் அமர்ந்து படித்து ஹிந்தியும் தெலுங்கும் அறிந்து கொண்டார் அச்சமாம்பா. கல்வியின் அவசியத்தையும் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படும் அவலத்தையும் அச்சிறு வயதிலேயே உணரத் தொடங்கினார் அச்சமாம்பா. சிறந்த சீர்திருத்தவாதியும் எழுத்தாளருமான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் எழுத்துக்கள் இவர்களை சமூக சீர்திருத்தத்தின் பக்கம் வழி வகுத்து விட்டன. அச்சமாம்பாவின் தம்பி ‘கொமர்ராஜு வெங்கட லக்ஷ்மண ராவு’ புகழ்பெற்ற கல்வியாளராகவும் வரலாற்று விமர்சகராகவும் விளங்கினார்.

இவர் ‘ஆந்திர விஞ்ஞான சர்வஸ்வம்’ எனப்படும் ‘என்சைகிளோபீடியா’ வை தெலுங்கில் எழுதி வெளியிட்ட பெருமை கொண்டவர். இவர் தமக்கையின் கல்வியறிவு வளம் பெறுவதற்குப் பக்கபலமாக இருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அச்சமாம்பாவின் மகனையும் மகளையும் குழந்தை பிராயத்திலேயே காலன் கவர்ந்து சென்று விடவே ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கி விட்டார் அச்சமாம்பா. அத்துயரத்திலிருந்து அச்சமாம்பாவின் மனதை படிப்பு, எழுத்து என்று திசை திருப்பி விட்டார் தம்பி லக்ஷ்மண ராவு. தம்பியின் ஊக்குவிப்பினால் அச்சமாம்பா தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், மராட்டி, பெங்காலி மொழிகளைக் கற்று அவற்றில் சிறப்பான புலமை பெற்று விளங்கினார். அனாதைக் குழந்தைகளை வீட்டில் எடுத்து வளர்த்து கல்வி புகட்டினார் அச்சமாம்பா.

தன் துன்பங்களை மறந்து தனக்கென்று ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்ட அச்சமாம்பா தன் ஆலோசனைகளுக்கு அட்சர வடிவமளித்து 1902ல் ‘தன திரயோதசி’ என்ற சிறுகதையை எழுதி வெளியிட்டார். பெண்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டியதன் தேவையை விளக்குவது இக்கதையின் நோக்கம். ஹிந்து சுந்தரி என்ற பத்திரிகை இந்த சிறுகதையை பிரசுரித்தது. தெலுங்கு இலக்கியத்தில் சிறுகதை இலக்கியத்திற்கு வழிகாட்டிய முதல் சிறுகதை இது.

பலப்பல நூல்களைப் படித்து, பரிசீலித்து ஆயிரம் ஆண்டுகால பெண்மணிகளின் வரலாற்றை நூலாக எழுதினார் அச்சமாம்பா. அதுவே ‘அபலா சத் சரித்திர ரத்ன மாலை’. இந்நூலில் மூன்று பாகங்களுள்ளன. புராண காலப் பெண்களின் வரலாறு, வரலாற்று கால பெண்களின் வரலாறு, ஆங்கிலேய மற்றும் வெளிநாட்டுப் பெண்மணிகளின் வரலாறு. தெலுங்கில் பெண்களின் வரலாற்றை நூல் வடிவில் வெளிக்கொணர்ந்த முதல் வரலாற்று நூலறிஞராகப் போற்றப்படுகிறார் அச்சமாம்பா. பிற மொழிகளில் எழுதி வந்த உலகப் பெண் எழுத்தாளர்களைப் பற்றி அச்சமாம்பாவின் படைப்புகள் மூலம் அறிய முடிகிறது. அச்சமாம்பா ஆந்திரப்பிரதேசம் முழுவதும் பயணித்து பெண் முன்னேற்றம் பற்றி சொற்பொழிவாற்றினார்.

பெண்களுக்கான சங்கங்களை ஏற்படுத்தினார். தன் கணவரோடு சேர்ந்து மச்சிலிப்பட்டணம் வந்து அங்கு ஒரு பெண்கள் பள்ளியில் சபை ஏற்பாடு செய்து அதற்கு அச்சமாம்பா தலைமை வகித்தார். பெண்கள் முன்னேற்றம் பற்றி உணர்ச்சி பூர்வமாக சொற்பொழிவாற்றி மகளிரை எழுச்சியுறச் செய்தார். அச்சமயத்தில் ‘பிருந்தாவன ஸ்திரீசமாஜம்’ என்ற சங்கத்தை தோற்றுவித்தார். மேலும் பல நகரங்களில் பெண் சங்கங்களைத் தோற்றுவித்தார்.

1905ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ‘பிலாஸ்பூர்’ என்னும் நகரில் பிளேக் நோய் பரவியது. அப்போது அச்சமாம்பா செவிலியராக மாறி சேவையாற்றி பலர் உயிரைக் காப்பாற்றினார். ஆனால் தானே அந்நோய்க்கு பலியாகி மரணமடைந்தார். முப்பது வயது கூட நிரம்பியிராத அச்சமாம்பா சக மனிதர்களின் சேவையில் உயிர் தியாகம் செய்த மனிதாபிமான மூர்த்தியாகக் கீர்த்தி பெற்றார். அச்சமாம்பாவின் மரணத்திற்கு ‘ஹிந்து சுந்தரி’ பத்திரிகை ஐந்து பக்கங்களுக்குப் புகழ் அஞ்சலி வெளியிட்டது. மேலும் ‘இப்பெண்மணி சமூக சேவைக்காகவே பிறப்பெடுத்தவர்’ என்றும், ‘ஹிந்து சுந்தரி பத்திரிகை தன் தாயை இழந்து வருந்துகிறது’ என்றும் போற்றியது. தன்னலமற்ற சேவை செய்த இந்த தியாகப் பெண்மணியை நாமும் போற்றி வணங்குவோம்.

கட்டுரையாளர்: ஹைதரபாத்தில் வசிக்கும்பிரபல எழுத்தாளர்