நோய் எதிர்ப்புத் திறன் மிக்க கருப்புக் கேரட்

பொதுவாக கருப்பு என்பதைத் தரக்குறை வானதாகக் கருதும் மனோபாவம் பலரிடம் உள்ளது. ஆனால், இது உண்மைக்குப் புறம்பானது. கருப்பு நிறம் கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் வீரம் மிக்கவர்களாக, வீரியம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். கருப்பரிசி உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது. ஆரோக்கியத்தைக் காக்கவேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவர்கள் கருப்பரிசியைப் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் கருப்பரிசி ஓரளவுக்குப் பயன்பாட்டில் உள்ளது. வடகிழக்குப் பாரதத்தில் கருப்புநிற அரிசிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தாவரங்களிலும் கருப்பு விளைபொருட்களுக்கு அலாதி இடம் உள்ளது. குறிப்பாக, அண்டை நாடான சீனாவில் கருப்புக் கேரட் விளைவிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதில் நோய் எதிர்ப்புத் திறன் மிகுந்துள்ளது. ஆரஞ்சு நிறக் கேரட்டைவிட, கருப்பு நிறக் கேரட்டில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. ஆரஞ்சு நிறக் கேரட் ஜூஸில் உள்ளதைவிட கருப்புக் கேரட் ஜூஸில் அந்தோசயானின் 28 மடங்கு அதிகமுள்ளது. ஆரஞ்சு நிறக் கேரட் ஜூஸ் கான்ஸன்ட்ரேட்டில் உள்ளதைவிட கருப்புக் கேரட் ஜூஸ் கான்ஸன்ட்ரேட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட் 12 மடங்கு அதிகமுள்ளது.

கருப்புக் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. அல்சீமர்ஸ் டிஸிஸ் எனப்படும் முதுமை சார்ந்த ஞாபக மறதிக்கு கருப்புக் கேரட் நிவாரணம் அளிக்கிறது. இது புற்றுநோயைத் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. செரிமானத்தை செம்மைப்படுத்துகிறது. மேனியை மெருகேற்றுகிறது. கூந்தலுக்கு செறிவூட்டுகிறது. 1623லேயே கருப்புக் கேரட் சாலட் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கப் பட்டுள்ளன.

‘ஃபிரான்சிஸ்கோ மார்டினஸ் மோன்டினோ’ பிரசித்தி பெற்ற சமையல் கலைஞர். அவர் இரண்டாவது பிலிப், மூன்றாவது பிலிப், நான்காவது பிலிப் ஆகிய மூன்று ஸ்பானிஷ் மன்னர்களிடம் சமையல்காரராகப் பணியாற்றியுள்ளார். ராஜ விருந்துகளில் கருப்புக் கேரட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதை மோன்டினோவின் குறிப்புகள் துல்லியமாகப் புலப்படுத்தியுள்ளன.

பல்வேறு நாடுகளிலும் கருப்புக் கேரட்டுக்குக் கிராக்கி அதிகரித்து வரும் வேளையில் பாரதத்திலும் இதை சாகுபடி செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இதற்கு விலக்கல்ல. கொடைக் கானல் பாம்பார்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஆசீர், தனது தோட்டத்தில் கருப்புக் கேரட்டை விளைவித்துள்ளார். ஊட்டி, கொடைக்கானல், மேகமலை போன்ற பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலை கருப்புக் கேரட் சாகுபடிக்கு உகந்தது. 90 நாட்களில் கருப்பு கேரட் அறுவடைக்கு வந்துவிடுகிறது.

தமிழகச் சந்தைகளிலும் கருப்புக் கேரட் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு விற்பனை செய்யப்படும் நாள் தொலைவில் இல்லை என்று மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.