ஆடவைத்த தோழி

வகுப்பில் மதிப்பெண் பட்டியலை ஆசிரியை விநியோகித்துக் கொண்டிருந்தார்.“மைதிலி இன்னும் நல்லா படிக்கணும். கோபி கணக்கை நல்லா போட்டு பார்க்கணும். வசந்த் இன்னும் படிக்கணும். வைஷ்ணவி சபாஷ். எல்லாத்துலயும் அதிகமா வாங்கியிருக்கே. இவளை மாதிரி எல்லோரும் படிக்கணும்” என்று ஆசிரியை வெகுவாக பாராட்டினார்.

அந்த வகுப்பில் எப்போதும் வைஷ்ணவிதான் முதலிடத்தில் வருவாள். அதனால் வகுப்பு தலைவியும் அவளே. அதில் அவளுக்கு கர்வம் உண்டு. தனது ஒவ்வொரு செயலிலும் பெருமைப்பட்டுக் கொள்வாள். வைஷ்ணவியை பாராட்டவே வகுப்பில் ஒரு பட்டாளம் இருக்கும்.
அதே வகுப்பில்தான் ரேணுகாவும் படித்தாள். அவள் வகுப்பில் சுமாராகவே படிப்பாள். அன்று பள்ளி நேரம் முடிந்து எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

“டீ வைஷு… எனக்கு படிப்பு சொல்லி தருவியா? வகுப்புல நடத்தறது ஒண்ணும் புரிய மாட்டேங்குது” என்றாள் ரேணுகா. “ஐயே போடி. மிஸ் நடத்தினாலே புரியாத உனக்கு, நான் சொல்லி தந்தா புரியுமா?” என்று கேலி செய்தாள் வைஷ்ணவி. கூட இருந்த தோழிகளும் ஏளனமாக சிரித்தார்கள். ரேணு அவமானத்துடன் சென்று விட்டாள்.

ஆண்டின் இறுதியில் ஆண்டு விழா அறிவிப்பு வந்தது. மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் அறிவிக்கப் பட்டன. கூட்டு நடனத்துக்கு அந்த வகுப்பில் இருந்து ரேணுகாவும் வைஷ்ணவியும் பெயர் கொடுத்தார்கள். தினமும் ஒத்திகை நடந்தது.
ஆண்டு விழாவுக்கு முதல் நாள் ஒத்திகையை தலைமை ஆசிரியை பார்வையிட்டார். ரேணுகா, வைஷ்ணவி ஆடிய நடனத்தின் முறை வந்தது. அப்போது “வைஷு… என்னம்மா உனக்கு சரியாவே ஆட வரல. இங்கே நில்லு” என்று பக்கத்தில் இருத்திக் கொண்டார் தலைமை ஆசிரியை. ரேணுவும் மற்றவர்களும் ஆடி முடித்ததும் “இவர்கள் போதும்” என்று சொல்லிவிட்டு எழுந்தார். வைஷ்ணவியின் முகம் வாடியிருந்தது.

அதைப் பார்த்த ரேணுகா, “மேடம்… வைஷுவையும் ஆட வைக்கலாமே? அவளுக்கு நான் கத்து தரேன்” என்று தலைமை ஆசிரியையிடம் வாதிட்டாள். அதைக் கேட்டதும் வைஷ்ணவியின் கண்கள் கலங்கிவிட்டன. “சரி அவளுக்கு ஆட வந்தா பார்க்கலாம்” என்றபடி நகர்ந்தார் தலைமை ஆசிரியை.மற்றவர்கள் சென்ற பிறகும் அமைதியாக இருந்த வைஷ்ணவியிடம் “உனக்கு நல்லாதான் வருது டி. பயப்படாம ஆடு” என்று உற்சாகப்படுத்தி கொஞ்சம் பயிற்சி தந்தாள் ரேணு. மறுநாள் ஆண்டு விழாவுக்கு முன் தலைமை ஆசிரியை முன் வைஷுவை ஆட வைத்தாள். “இப்போ நல்லா ஆடறாளே” என்று அவரும் உற்சாகப்படுத்தினார்.

ஆண்டு விழாவில் இவர்களின் நடனத்துக்கு பயங்கர கரகோஷம். “டீ ரேணு, உன்னாலதான் நமக்கு எல்லாம் இவ்வளவு பாராட்டு! இவ்வளவு நல்லா ஆடறே? அது மட்டுமில்ல, எனக்கு ஆடச் சொல்லிக் குடுக்கவும் உன்னால முடியுது. ஆனா அதையெல்லாம் இதுவரை காட்டிக்கவே இல்லியே நீ?” என்று வைஷ்ணவி கொட்டித் தீர்த்துவிட்டாள் தன் வியப்பை.அவள் மனதுக்குள் ’நானும் ரேணுவுக்கு பாடம் கத்துக் குடுத்து அடுத்த தேர்வுல முதலிடம் வாங்கச் செய்யணும்’ என்ற எண்ணம் ஓடியது.
உடையது விளம்பேல்!

-பிரவீண்