நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை வெள்ளை அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், தமிழக அரசின் நிதிநிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 2014க்கு பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை, பல ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தவில்லை. வரி அல்லாத வருமானம் 1 சதவீதத்தில் இருந்து 0.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாக சரிந்துள்ளது. 1 கி.மீ. தூரம் பொது போக்குவரத்து இயங்கினால் ரூ. 59.15 இழப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க, சில வரிகளை உயர்த்தியபோது மக்களை கொள்ளை அடிக்கின்றனர் என கூச்சலிட்டு தடுக்க முயன்ற தி.மு.க, தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, முந்தைய அரசு வரிகளை உயர்த்தவில்லை என குற்றம் சாட்டுவது வேடிக்கை. மேலும், ‘தி.மு.க தலைமையிலான அரசு ஆகஸ்ட் 13ல் சமர்ப்பிக்க உள்ள பட்ஜெட்டில் மின்சாரக் கட்டணம், சொத்து வரி, பேருந்து டிக்கெட் உள்ளிட்டவற்றை பலமடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதையே இது காட்டுகிறது. வெள்ளை அறிக்கையை தி.மு.க முறைப்படி சட்டமன்றத்தில் வெளியிட்டு அதன் மீது விவாதம் நடத்தாமல் இப்படி பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவதே, அவர்கள் நடத்தும் நாடகமாகத்தான் தெரிகிறது’ என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தங்களை தேர்ந்தெடுத்தால் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும் என மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க, தான் அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப்போகிறது, அதற்காக மக்களிடம் என்னென்ன வரிகளை உயர்த்தப்போகிறது, ஓட்டுப்போட்ட மக்கள் அதற்காக என்னென்ன தியாகங்களை செய்தாக வேண்டும் என்பதெல்லாம் விரைவில் தெரிந்துவிடும்.