மோடி தலைமையில் ஐ.நா விவாதம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடைபெற்ற ஒரு உயர்மட்ட திறந்த விவாதத்தில் பாரதப் பிரதமர் மோடி தலைமைத் தாங்கினார். ஐ.நாவில் இதுபோன்ற விவாதத்தில் தலைமை வகிக்கும் முதல் பாரதப் பிரதமர் மோடி’தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கான்பரன்சிங் வழியாக நடைபெறும் இந்த விவாதம் ‘கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதலில் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு வழக்கு’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில், ஐ.நா சபையின் முக்கிய உயர்மட்ட விரிவுரையாளர்கள், பல நாட்டுத் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஏற்கனவே சில வாரங்கள் முன்பு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடல் பாதுகாப்பு, கடல் குற்றங்கள் குறித்த பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும், கடல் பாதுகாப்பு குறித்த ஒரு உயர்நிலை திறந்த விவாதம் என்பதை மட்டுமே பிரத்யேக நிகழ்ச்சி நிரலாகக்கொண்டு முழுமையான விவாதம் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.