தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில், வழக்கம் போலவே இலவசங்களை அறிவித்து வருகின்றன இக்கட்சிகள்.

பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத தி.மு.க, அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற பேராசையில், இருக்கும் திட்டங்களுக்கு புதிய பெயர், மத்திய அரசின் சில திட்டங்களை திருடி தங்கள் திட்டமாக அறிவிப்பது, ஏற்கனவே இருக்கும் திட்டங்களையே மீண்டும் அறிவிப்பது, சாத்தியமில்லா வெற்று திட்டங்கள், பயனில்லா திட்டங்கள் என சிலவற்றை அறிவித்து மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆளும் கட்சியும் அதற்கு போட்டியாக பல்வேறு இலவசங்களை அறிவித்துள்ளது.

ஏற்கனவே மாநிலத்தின் கடன் சுமை எழு லட்சம் கோடியை தாண்டியுள்ள நிலையில் இந்த இலவசங்கள் குறித்த அறிவிப்பு அவசியமா என்றால், எதிரணியினருக்கு பதிலடி கொடுக்க, ஆளும் கட்சியும் வேறு வழியின்றி இப்படி அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதே எதார்த்தம்.

ஆட்சிக்கு வந்த பின், இலவசங்களுக்காக மற்ற வரிகளை உயர்த்துவது, மானியங்களைக் குறைப்பது, கடன் சுமையை அதிகரிப்பது என மக்களுக்கு சுமை ஏற்படுத்தி அவர்களின் வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஆட்சிக்கு வருபவர்களின் கடமை.

இந்நிலையில், இந்த தேர்தல் அறிக்கைகள் சாத்தியமா என பார்த்தால், இதுவரை கடந்த 60 ஆண்டுகள் திராவிட ஆட்சிகளில், தாங்கள் அறிவித்த வாக்குறுதிகளை ஓரளவாவது நிறைவேற்றியுள்ளது அ.தி.மு.க அரசு என கூறலாம். உதாரணமாக, சத்துணவு திட்டம், இலவசக் காலணி, இலவச மடிக்கணினி, கிரைண்டர், மிக்சி, மின்விசிறி போன்ற திட்டங்களை கூறலாம். ஆனால் தி.மு.க வரலாற்றில் அப்படி கூறுவதற்கு ஏதுமில்லை. உதாரணமாக, ரூபாய்க்கு 3 படி அரிசி, இரண்டு ஏக்கர் நிலம், வேலை இல்லாதோருக்கு மாதம் ரூ. 2,000 என பல திட்டங்களை கூறமுடியும்.

தி.மு.க அறிவித்து ஓரளவு வெற்றிகரமாக செயல்படுத்திய திட்டமும் ஒன்று உண்டு என்பது மறுப்பதற்கில்லை. அது, இலவசத் தொலைகாட்சி திட்டம்தான். ஆனால் அத்தொலைகாட்சியில் மாதம் தோறும் படம் பார்க்க மக்கள் கேபிள் இணைப்பை தங்கள் குடும்ப நிறுவனத்தில் இருந்து பெற வேண்டும், அதனால் தங்கள் குடும்பம் பல கோடிகளை சேர்த்து செழிக்க வேண்டும் என்று முழுக்க முழுக்க சுயநலத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டமே அது என்பதை சற்று ஆராய்ந்து பார்த்தால் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

தி.மு.க தற்போது அறிவித்துள்ள திட்டங்களும்கூட மக்களுக்கு எந்த வகையிலும் பயன் தராது, அவர்களது குடும்பத்தை வளமாக்கிக் கொள்ளவே உதவும். ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும், தமிழகத்தை கொள்ளையடித்து, விட்டதை எல்லாம் பிடிக்க வேண்டும். தங்கள் குடும்பமே தமிழகத்தை தொடர்ந்து ஆளவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே அவர்களின் இந்த தேர்தல் அறிக்கை உள்ளது என்பதை கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

இதனை மக்கள் புரிந்துக்கொண்டு விழிப்புடன் இருந்து தங்களையும் தேசத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்.

  • மதிமுகன்