அக்னி பாத் உலகின் வழிகாட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வ.உ.சி’யின் 150வது பிறந்தநாள் விழா குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். இதில், தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தா, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத்தலைவர் சகோதரி நிவேதிதா, தேசிய பாதுகாப்பு ஆலோசக வாரிய உறுப்பினரும், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு, மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த 8 பேருக்கு வ.உ.சி.விருது வழங்கப்பட்டது.இவ்விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தேசத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களை நாம் நினைவுகூர வேண்டும்.அவர்கள் தேசத்துக்கு ஆற்றிய சேவைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.இங்கு அமர்ந்திருப்பவர்கள் சனாதன தர்மத்தை உலகறியச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.நாம் இப்போது அந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம்.பாரதம் எழுச்சி பெற்றுவருகிறது.நமது நாடு தற்போது தன்னுடைய சுய பலத்தை உணர்ந்துள்ளது.கரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் 150 நாடுகளுக்கு உதவிகளைச் செய்துள்ளது.நாட்டில் உள்ள வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நோக்கில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.இளைஞர்களுக்காக வெளிப்படைத் தன்மையுடன் கொண்டுவரப்பட்டுள்ள அக்னி பாதை திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.இதன் மூலம் இளைஞர்களிடம் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் உருவாகும்.4 ஆண்டுகளுக்குப் பிறகு சுய தொழில் தொடங்கும் வகையில் பொருளாதார ரீதியாக அந்த இளைஞர் உயர்வார்கள்.அக்னி பாதை திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு நாட்டின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.நாட்டின் வளர்ச்சியில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும்.2047ல் அக்னி பாதை திட்டம் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும்.எனவே, அக்னி பாதை திட்டம் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம் வேண்டும்’ என்றார்.