ஏ.பி.வி.பி தேசிய செயற்குழு

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய செயற்குழுவின் மூன்று நாள் கூட்டம் சிம்லாவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து வந்த பிரதிநிதிகள், அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மதிப்பாய்வு செய்து, வரும் ஆண்டிற்கான திட்டங்களை முன்மொழிந்தனர்.  வரும் ஆண்டிற்கான கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில், ஏ.பி.வி.பியின் மாணவர்கள் மூலம் ‘விருக்ஷ மித்ரா’ என்ற பெயரில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் உருவாக்கப்பட்டது. இப்பணிகள் ஜூன் 5ம் தேதி முதல் தொடங்கப்படும். கடந்த ஆண்டு, சுதந்திரமடைந்த 75வது வருட துவக்கத்தையொட்டி சுதந்திர தினத்தன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏ.பி.வி.பி கட்சியினர் மூவர்ணக் கொடியை ஏற்றினர். இவ்வருடம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஏ.பி.வி.பி மாணவர்கள் 2 லட்சம் கிராமங்களுக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றுவார்கள்.

அடுத்த ஆண்டு ஏ.பி.வி.பி அதன் 75வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, அமைப்பை பலப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் ஜாதி, மதம் போன்ற பாகுபாடுகளை விட்டுவிட்டு, நாட்டின் நலனுக்காக தங்கள் நேரத்தை அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கிறிஸ்தவ மிஷனரிகளின் சதியால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவி லாவண்யாவுக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பின் போராட்டம் தொடரும். நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஏ.பி.வி.பி தனது பிரச்சாரமான “செல்ஃபி வித் கேம்பஸ் யூனிட்” செப்டம்பர் மாதத்தில் மீண்டும் தொடங்கும். நாடு முழுவதும் உள்ள ரத்த தானிகளின் பட்டியல் தயார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மாநிலப் பல்கலைக் கழகங்களில் தலையிடுவதன் மூலம் கல்வி நிறுவனங்களின் சுயாட்சியைக் குறைக்கும் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல், மாணவர்களை மையமாகக் கொண்ட மற்றும் எதிர்காலம் சார்ந்த தேசியக் கல்விக் கொள்கை, பாரதத்தை ஒரு தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுதல் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.