ஓரு மௌன சாதகர்

சுனில் கிர்வாய் எழுதிய ‘சேவவ்ரதி கர்மயோகி பத்மஸ்ரீ டாக்டர் தாமோதர் கணேஷ் பாபட்’ என்ற புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வெளியிட்டு பேசுகையில், “ தாமோதர் கணேஷ் பாபட் ஒரு மௌன சாதகர். அவர் தனது சேவையால் பலரை ஊக்கப்படுத்தினார்.  ஆனால் அவருடைய பணிக்காக அவர் எந்தப் புகழையும் விளம்பரத்தையும் தேடியதில்லை” என கூறினார்.

இந்த புத்தகத்தின் முன்னுரையை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் எழுதியுள்ளார். அதில், “பாபட், பத்மஸ்ரீ விருது பெற்றிருந்தாலும், அவர் பிரபலமாகவில்லை. வெகு சிலரே அவரை அறிந்திருந்தனர். மிகக் குறைவான மக்கள் கூட அவரைப் புரிந்து கொண்டனர். காரணம் அவரது சுயநலம் குறைந்த ஆளுமை. அவர் தனது பணிக்காக எந்த அங்கீகாரத்தையும் பாராட்டையும் நாடவில்லை” என்று எழுதியுள்ளார்.

புத்தகத்தின் வெளியீட்டாளர் பிரதீப் குமார் கூறுகையில், “தனது வாழ்நாள் முழுவதும் ஒரு நோக்கத்திற்காக பணிபுரிந்து, தனக்கென எந்த விளம்பரத்தையும் தேடாத ஒரு ஆளுமையைப் பற்றி புத்தகம் எழுதுவது எளிதானது அல்ல. அவர் தன்னைப் பற்றி அதிகம் பேசாததால் அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது” என்றார்.

மகாராஷ்டிராவின் பத்ரோட் கிராமத்தில் பிறந்த பாபட், நாக்பூரில் தனது கல்வியை முடித்தார். நாக்பூரில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அதில் அவர் திருப்தி அடையவில்லை. சமூகப் பணிகளுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் அதிகமானது.

1970ல், அவர் சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூருக்குச் சென்று வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கினார். பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரத் தொடங்கினார். அங்கு பணிபுரியும் போது, ​​பல தொழு நோயாளிகளைப் பற்றி அறிந்து கொண்டார். தொழுநோயாளிகளின் அவல நிலையை அருகிலிருந்து பார்த்த பாபட், தொழுநோயாளிகளின் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

சதாசிவ்ராவ் கோவிந்தராவ் கத்ரே 1962ல் தொழுநோயாளிகளைக் கவனிப்பதற்காக பாரதிய குஷ்ட நிவாரக் சங்கத்தை (BKNS) நிறுவினார். 1972ம் ஆண்டில், பாபட் இந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தனது வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை சேவை தொடர்ந்தார். 45 ஆண்டுகள் அதன் செயலாளராகப் பணியாற்றினார்.

87 வயதில், பாபட் ஆகஸ்ட் 17, 2019 அன்று சத்தீஸ்கரில் காலமானார். அவருக்கு 2018ல் பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. 160 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் பாபட்டின் வாழ்க்கையைப்பற்றி பற்றி பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அதை ‘நிஷ்காம் கர்மயோகி ‘ என்ற இரண்டு வார்த்தைகளில் சுருக்கலாம்.