மக்களை சுரண்டும் அரசு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த ஜெயபால், மாரிமுத்து உள்ளிட்ட ஏழு பேரை வாகன ஓட்டுனர்களாக மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. இதனால், தங்களை டிரைவர்களாக நியமிக்க இருவரும் கோரினர். ஆனால், அவர்களது கல்வித்தகுதியை காரணம் காட்டி அவர்களுக்கு ஓட்டுனர்களாக பணி நியமனம் வழங்க மாநகராட்சி மறுத்துவிட்டது. இதை எதிர்த்து ஜெயபால் உள்ளிட்ட ஏழு பேர் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்தநீதிமன்றம், ஜெயபால் உள்ளிட்ட ஏழு பேரை டிரைவர்களாக நியமிக்கும்படி, 2017ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, குறைந்த ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளர்களை, அதிக ஊதியம் தரப்பட வேண்டிய டிரைவர்களாக அரசு பயன்படுத்தியுள்ளது. இது, சொந்த குடிமக்களை அரசே சுரண்டுவதற்கு ஒப்பானது. இதுபோல மக்களை சுரண்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும். நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளையும், சுரண்டல்களையும் அரசு செய்யாது என்ற நம்பிக்கையில் தான் தொழிலாளர்கள் நலச் சட்டங்களில் அரசு சேர்க்கப்படவில்லை என்று கூறி அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் ஏழு பேருக்கும் ஓட்டுனர்களாக பணிநியமனம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.