தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஜனவரி 1 முதல் ஆடைக்கட்டுப்பாடு அமலுக்கு வந்தது குறித்து ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வழக்கம்போல் கோயில் வழிபாடுகளில் நம்பிக்கையே இல்லாத கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழக சிந்தனையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இத்தகைய கருத்தாளர்கள் ஒரு சதவீதம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை ஹிந்து சமுதாயம் ஒரு பொருட்டாகவே கருத வேண்டியது இல்லை.
ஆனால் அறநிலையத்துறையின் உத்தரவால் ஏற்பட்ட மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை. காரணம் ஆடை உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்னென்ன உடை அணிந்து வர வேண்டும் என்று ஏற்கனவே விதிகள் இருக்கும்போது இப்போது பிறப்பித்துள்ள ஆடைக்கட்டுப்பாடு உத்தரவு தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கனவே ஆடைகளுக்கான விதிமுறைகள் இருந்தால் அவற்றை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
ஹிந்துக்களின் வழிபாடு விஷயத்தில் அப்பீலுக்குப் போய் வில்லங்கம் வளர்க்கும் விபரீதத்தை அரசு கைவிடவேண்டும். கோயில்களில் காணப்படும் பல குளறுபடிகளுக்கு தமிழக அரசுதான் காரணமாகும். கோயில் நிர்வாக விஷயங்களைக் கவனிக்க மட்டுமே அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு. வழிபாட்டு உரிமைகளில் தலையிட அறநிலையத்துறைக்கோ, அரசுக்கோ அதிகாரம் கிடையாது.
கோயில்களில் தரிசன கட்டணத்தை அறிமுகப்படுத்தி கோயில்களை வியாபார மையங்களாக மாற்றி வருகின்றனர். கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் கோயில் நிர்வாக அதிகாரிகளாகவும் தர்மகர்த்தாக்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமான கோயில் சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன.
கிறிஸ்தவ சர்ச் நிர்வாகத்தில் தலையிடாத அரசு, முஸ்லிம்களின் மசூதி நிர்வாகத்தில் தலையிடாத அரசு ஹிந்துக்களின் கோயில் நிர்வாகத்தில் மட்டும் தலையிடுவது நியாயமற்றது. எனவே, ஏற்கனவே ஹிந்து இயக்கங்களால் வலியுறுத்தப்படும் ‘அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு’ என்ற கோஷம் மீண்டும் முழங்கியாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.