பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியையடுத்து, காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுவான “சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்” (எஸ்.எப்.ஜே) அமைப்பு முதல்வராக நியமிக்கப்படவுள்ள ஆம் ஆத்மியின் பகவந்த் மானுக்கு ஒரு வீடியோ செய்தி அனுப்பியுள்ளது. அதில், ‘அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் வெல்வதற்காகவும் காலிஸ்தான் வாக்குகளையும் அதன் நிதியையும் பயன்படுத்துவதற்காகவும் எஸ்.எப்.ஜேவுக்கு துரோகம் செய்துள்ளது. எஸ்.எப்.ஜே தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னு ஆம் ஆத்மியை ஆதரிப்பதாக ஒரு போலி கடிதத்தை ஆம் ஆத்மி கட்சி தயாரித்து அதற்கு பயன்படுத்தியுள்ளது. அதனை பயன்படுத்தி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்களிடம் இருந்து பெருமளவு நிதியுதவியையும், ஆதரவையும் ஆம் ஆத்மி பெற்றுள்ளது. இப்போது ஆம் ஆத்மி கட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளதால், பாரதத்தில் இருந்து பஞ்சாப்பை பிரிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் பொது வாக்கெடுப்பு பஞ்சாபில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. மேலும், ‘காலிஸ்தான் இயக்கத்தை அழிக்க நினைத்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொல்லப்பட்டார், பிரகாஷ் சிங் பாதல், அமரீந்தர் சிங்கின் அரசியல் வாழ்வு அஸ்தமித்து விட்டது. காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாரதத்துக்கும் இடையிலான பிரச்சினையில் ஆம் ஆத்மி தலையிட வேண்டாம்.’ என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ‘ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தன்னிடம், பஞ்சாப் முதல்வராகவோ அல்லது சுதந்திர காலிஸ்தானின் முதல் பிரதமராகவோ நான் வருவேன்’ என்று ஒருமுறை கூறியதாக முன்னாள் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்ட பின்னணியில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.