வீரமணிக்கு பயந்தாரா சேகர்பாபு?

தமிழக அரசின் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘ஹிந்து அறநிலையத்துறை வரலாற்றில் முதல்முறையாக மகா சிவராத்திரியன்று 100க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ம் தேதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவ்விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகா சிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்’ என்று கூறியிருந்தார். இதற்கு திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ஹிந்து அறநிலையத்துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவது அல்ல. கோயில் சொத்து, வரவு செலவு கணக்குகளைக் கண்காணிப்பதும், சரிபார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும்தான். பார்ப்பனர்களைத் திருப்தி செய்வதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச்சார்பற்றவர்களது மனதை புண்படுத்தலாமா? அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சனையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா?’ என கூறியுள்ளார். வீரமணியின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் மகா சிவராத்திரி தொடர்பான செய்தியாளர் சந்திப்பை அமைச்சர் சேகர்பாபு தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்த செயலை பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினரும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். தி.மு.க ஹிந்துக்களுக்கான கட்சி என நினைத்திருந்தால், வீரமணி அறிக்கைக்கு சேகர்பாபு பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை புறக்கணித்திருக்கக் கூடாது என்றும், ஹிந்துக்களின் ஓட்டுக்களுக்காகவே மகா சிவராத்திரி விழாவை ஏற்பாடு செய்து தி.மு.க நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு ஹஜ் யாத்திரைக்கு மானியம் கொடுத்தபோது, சந்தன கூடு விழாவிற்கு சந்தன கட்டைகள் கொடுத்தபோது, ரம்ஜான் நோன்பு கஞ்சி வைக்க அரிசி இலவசமாக கொடுத்தபோது, உலமாக்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், உதவி தொகை வழங்கியபோது, சர்ச்,மசூதிகளை பராமரிக்க மக்கள் வரிப்பணத்தை வாரிக் கொடுத்தபோது எல்லாம் சந்தோஷமாக இசைவு தெரிவித்தது தி.க. ஆனால், ஹிந்து கோயில்களில் ஹிந்து பக்தர்கள் செலுத்தும் பணத்தில், ஆலயத்தை நிர்வகிக்கும் அரசு ஒரு விழாவை அறிவித்தால் அதற்கு கண்டனம் தெரிவிக்கிறார் வீரமணி. ஹிந்துக்களின் மீது எவ்வளவு வன்மம் இவர்களுக்கு !?