புதுக்கோட்டையில் உள்ள திருமயத்தில் பிறந்த தீரர் சத்திமூர்த்தி, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். காங்கிரஸ் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு தமிழக காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தம், ரவுலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதாட இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார்.
1937ல் நடைபெற்ற சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, சென்னை மாகாண கவுன்சிலரானார். 1939ல் சென்னையின் கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க, ஆங்கிலேய அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கம் அமைய காரணமானார். அது இன்றளவும் மக்களின் தாகம் தணிக்கிறது.
தமிழகத்தின் தலைசிறந்த முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தவர் தீரர் சத்திய மூர்த்தி. 1936ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தெடுக்கப்பட்ட சத்தியமூர்த்தி, காமராஜரை பொது செயலாளராக நியமித்தார். தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராஜரை தலைவராக்கி அழகுபார்த்தார். காமராஜரின் தலைமையின்கீழ் செயலாளராகப் பணியாற்றிய பெருந்தன்மை, இன்றைய அரசியல்வாதிகளுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுதாரணம்.
நாட்டுக்காக மட்டுமல்லாமல் பாரதி பாட்டுக்காகவும் அவர் போராடினார். பர்மா அரசு, பாரதி பாடல்களைத் தடைசெய்தது. பாடல் நூல்களை பறிமுதல் செய்தது. அதைக் காரணம் காட்டி அன்றைய “சென்னை ராஜதானி“ பாரதி பாடல்களைத் தடைசெய்தது. அதை எதிர்த்து முழங்கிய தீரர் சத்தியமூர்த்தி, “நீங்கள் தாராளமாக எங்கள் பாரதியின் பாடல்களைத் தடைசெய்து கொள்ளலாம், பாரதியின் பாடல் நூல்களையும் பறிமுதல் செய்து எரிக்கவும் செய்யலாம். எங்களுக்கு ஆட்சேபணை இல்லை“ என்று தன் பேச்சைத் தொடங்கினார்.
அனைவரும் அதிர்ந்தனர். தொடர்ந்து பேசிய சத்தியமூர்த்தி, “ஆனால் அது வெட்டி வேலை. ஏனெனில், பாரதி பாடல்கள் அனைத்தும் எங்கள் தேசபக்தி மிக்க தமிழர்களுக்கு மனப்பாடம். நாங்கள் ஊர்ஊராகப் பாரதியைப் பாடிக்கொண்டு ஊர்வலம் போவோம். மனப்பாட சக்தியைப் பறிமுதல் செய்யும் புதிய எந்திரம் எதையும் நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், உங்களால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. அதனால் நீங்கள் பாடல்களைத் தாராளமாகத் தடைசெய்யலாம். ஆனால் அது வீண் வேலை” என்று முழங்கினார். பின்னர் பாரதி பாடல்களைத் தடைசெய்யும் முயற்சியை அன்றைய சென்னை மாகாண அரசு கைவிட்டது.