தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 4 ஏக்கர் இடம் உள்ளது. இதனை மாத வாடகை ரூ 480 வீதம் 99 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு எடுத்த சிலர், அங்கு டாஸ்மாக் கடை, கிளப், லாட்ஜ் போன்றவற்றை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் கூடுதல் கலெக்டர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாட்டு வார்டு அமைக்க அந்த இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட அறிஞர்கள் நாடகம் நடத்திய புகழ்பெற்ற ராமநாதன் சபாவில் நடத்தப்பட்டு வந்த அனுமதியில்லாத தனியார் டாஸ்மாக் கடையும் ஆய்வு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த ஆர்.கே குரூப்ஸ் என அழைக்கப்படும் சகோதரர்களில் ஒருவரான ஆர்.கே. நாகராஜ், “என்ன சார், சீல் வச்சீங்கண்ணா எங்களால உடைக்க முடியாதா” எனக் கூடுதல் ஆட்சியரை மிரட்டினார். மேலும், டேய், அந்த சீல உடைங்கடா” என தன் அடியாட்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், “சார் முதல்ல இது என்ன ஊர்னு தெரிஞ்சுக்கங்க, உங்களைபோல பல அதிகாரிகளை நாங்கள் பார்த்துவிட்டோம்” எனவும் மிரட்டினார்.
நாகராஜ் தி.மு.கவில் முன்னாள் கவுன்சிலராகவும் தற்போது வார்டு செயலாளராகவும் உள்ளார். இதனையடுத்து நாகராஜ் மீது, அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாள் முதலே, அக்கட்சியினர் இதுபோல நடந்துகொள்வது வழக்கமாகிவிட்டது. ‘இவர்களுக்கு ஏன் ஓட்டு போட்டோம்’ என இப்போதே பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.