பரதனாரே… தங்களுக்குப் பிடித்த ஒரு திருக்குறள்…
– ச. தம்பிதுரை, பழவேற்காடு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”
இந்த குறள் சொல்லும்போது இரண்டு உதடுகளும் ஒட்டாது. எந்தெந்த பொருள்களிலிருந்து பற்று விலகுகிறதோ அந்தந்த பொருள்களால் துன்பமில்லை என்கிறார் வள்ளுவர்.
பணத்தால் சாதிக்க முடியாதது ஏதாவது இருக்கிறதா?
– ந. கோவிந்தன், ஊட்டி
ஆர்.கே.நகர் தொகுதியில் பணத்தால் முடியும் என்று தினகரன் உறுதியாக நம்பினாரே… நடக்கலையே…
* இந்த ஆண்டின் தமாஷ் எது?
– அ. கீர்த்தீஸ்வரன், நல்லகவுண்டன் பாளையம்
வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோலை மிதக்க விட்டாரே அமைச்சர் செல்லூர் ராஜு. அவருக்கு ‘தெர்மாகோல் விஞ்ஞானி” என்று பட்டமே கொடுக்கலாம்.
தொழிலாளர்களை ஒன்றுபடுத்துகிறதா கம்யூனிஸ்ட்?
– உ. சுவாமிநாதன், வெள்ளக்கோயில்
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று கோஷமிடுவார்கள். ஆனால் உள்ளூர் தொழிலாளர்களை இரண்டாகப் பிரித்து விடுவார்கள். ஒரே தொழிற்சாலையில் வலது, இடது தொழிற்சங்கங்கள் ஏன்?
கிறிஸ்தவர்கள் போன்று முஸ்லிம்கள் மதம் மாற்றுவதில்லையே…?
மகாத்மா காந்திஜியின் மூத்த மகன் ஹரிலால் மதுவுக்கு அடிமையானார். அவரை முஸ்லிமாக மதம்மாற்றி ‘அப்துல்லா காந்தி’ என்று பெயர் சூட்டி முஸ்லிம் லீக் மேடைகளிலேயே காந்திஜியை விமர்சித்து பேச வைத்தனர். கிறிஸ்தவர்கள் மாற்றுவது தெரியும்; முஸ்லிம்கள் மாற்றுவது தெரியாது.
நாகரிகம் என்ற பெயரில் சில இளைஞர்கள் ஒரு காதில் மட்டும் கடுக்கன் அணிந்து
கொள்வது பற்றி…?
– மா. முத்தரசன், அழகன் குளம்
ஒரு பிரபலமான கல்லூரியில் சேருவதற்காக நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த மாணவர்களில் சிலர் ஒரு காதில் கடுக்கன் அணிந்திருந்தார்கள்; மேலும் சிலர் வாயைச் சுற்றி தாடி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு இடமில்லை என்று உடனேயே அனுப்பி விட்டனர். ஒரு காதில் கடுக்கன் அணிவது பண்பாடுஅல்ல.
* டெல்லியில் மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக வெற்றி பெற்றது பற்றி?
– பூ. பிரசாந்தி, சரவணம்பட்டி
கேஜ்ரிவாலைப் பற்றி தப்பா எடைபோட்டு வாக்களித்ததற்கு பரிகாரமாக இப்போது பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். ஏதோ ஒரு நம்பிக்கையில் டெல்லி மக்கள் கேஜ்ரிவாலுக்கு வாக்களித்தனர். அதை சரியாகப் பயன்படுத்தாமல் மோடி எதிர்ப்பையே பிரதானமாக்கி பிரதமராகி விட கனவு கண்டவருக்கு ஒரு சவுக்கடி.
* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.