75,000 கோடியில் திட்டங்கள் துவக்கம்

மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, சம்ருத்தி மகாமார்க் மற்றும் மோபா விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மகாராஷ்டிராவில் 75,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்க இன்று காலையில் நாக்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பிரதமர், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர், ஃப்ரீடம் பார்க் மெட்ரோ நிலையத்திலிருந்து காப்ரி மெட்ரோ நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் சென்று அங்கு ‘நாக்பூர் மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தை’ நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கும் பிரதமர், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் 520 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய சம்ருத்தி மகாமார்க்கின் முதல் கட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.இந்த 701 கி.மீ அதிவேக நெடுஞ்சாலை சுமார் ரூ.55,000 கோடி செலவில் கட்டப்படுகிறது.இது பாரதத்தின் மிக நீளமான விரைவுச் சாலைகளில் ஒன்றாகும்.இது மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.நாக்பூரில் நடைபெறும் பொது விழாவில், நாக்பூர் ரயில் நிலையம் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்களை முறையே ரூ.590 கோடி மற்றும் ரூ. 360 கோடி செலவில் மறுவடிவமைப்பு செய்ய பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன் ஜூலை 2017ல் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர், கோவாவில், சுமார் 2,870 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.