தமிழகத்தையாவது தனியாக விடுவதாவது

ஒரு புள்ளியை வைத்துவிட்டு என்ன வரையப் போகிறார் என்பதை ஆச்சரியத்தோடு பார்த்திருப் பார்களாம் லியானார்டோ டாவின்சியின் ரசிகர்கள்! அதுபோல ஒரு வாக்கியத்தை பேசிவிட்டு இதை வைத்து இவரின் அரசியல் வியூகம் எத்திசையில் நகரும் என்பதை பயத்தோடு எதிர்பார்த்திருக்கும் எதிர்க்கட்சிகள் என்ற புது நிலையை உருவாக்கி வருகிறார் நரேந்திர மோடி. முதலாவதாக, அரசியல் சாஸன ஷரத்து ௩௭௦. எதிர்த்து முணுமுணுக்கக் கூட நேரங் கொடுக்காமல், நிறைவேற்றிக் காட்டினார் மோடி. இதற்கு முன்பு ஷரத்தை எதிர்த்து நேரடியாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக ஊரில் அனைத்துப் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று பேசினார். அடுத்த மாதத்தில் முத்தலாக் நிறைவேறியது. காஷ்மீர் மக்களுக்கு முன்னேற்றம், வளர்ச்சி வேண்டும். அதற்கெதிரான தடைக்கற்கள் அகற்றப்பட வேண்டும் என்றார். 370 என்கிற தடைக்கல் ஓராண்டில் அகன்றது!
மோடியின் திட்டங்கள் Time bound கால நிர்ணயம் செய்யப்பட்டது. எவ்வளவு காலம் என்பது மோடிக்கு மட்டுமே தெரியும். ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்!

தற்போது தமிழைக் கையில் எடுத்திருக்கிறார். கடந்த 3,4 ஆண்டுகளாக ‘‘தமிழ்புகழ்’’ பாடிவருகிறார். இது ஏதோ திட்டத்தால்தான் என்றாலும் ‘‘உள்ளன்போடு’’ நெஞ்சின் ஆழத்திலிருந்து பேசி வருகிறார். ‘‘என்ன கொடுத்தாலும் படிப்பேன் ஆனால் தப்பும் தவறுமாகத்தான் படிப்பேன்’’ என்ற ஸ்டாலின் போல் எழுதிக் கொடுப்பதை’ படிப்பவர் அல்ல மோடி. மாறாக தான் விரும்புவதை எழுதி வாங்குபவர் மோடி. ஏற்கனவே சங்க பிரச்சாரகராக இருந்த போது தமிழகத்திற்கு பலதடவை வந்து போனதால் தமிழகத்தின் மீது காதல் கொண்டவர் மோடி. தமிழ் கலாச்சாரம், பண்பாடு, உணவுப் பழக்கம் முழுவதும் தெரிந்தவர் மோடி. இதன் வெளிப்பாடுதான் அவர் தமிழை தூக்கிப் பிடிக்கும் செயல்பாடுகள். போனவாரம் சென்னை IITயில் அவர் ஆற்றிய உரையில் ‘‘தமிழ்மொழி உலகின் மூத்தமொழி’’ என்றது தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு ‘‘கிலியை’’ ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒருவார்த்தை மட்டுமே திமுக போன்ற கட்சிகளுக்கு ‘கிலி’ ஏற்படுத்தியதற்கான காரணமல்ல!
இதற்கு முந்தைய வாரம் அமெரிக்காவிலுள்ள ஐ.நா சபையின் 74வது பொதுக்குழுவில், பாகிஸ்தானுக்கு பதிலடி தந்து உலக நாடுகளை அசத்திய பேச்சின் அடிநாதம் கணியன் பூங்குன்றனாரின் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ மேற்கோளாகும்!

இது தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளுக்கு ‘‘தர்ம அடி’’ கொடுப்பதற்கு சொல்லப் பட்டதல்ல. மோடி முன்பு இவர்கள் ஜுஜுப்பிகள். மாறாக வசுதெய்வ குடும்பகம் என்ற RSSன் மறு மொழியாக இந்தியா உலகை ஒரே குடும்பமாகப் பார்க்கிறது என்கிற இந்துத்துவத்தின் பரந்த நோக்கை பட்டியலிடுகிறார்.
இதற்கும் தமிழ்நாட்டின் மீது மோடியின் ‘‘மறைமுக நோக்கம்” என்கிற இடது சாரிகளின் கூக்குரலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இல்லை!

மோடியின் இரண்டாவது முறை வெற்றிக்குப் பிறகுதான் திராவிட கட்சிகளும், இடதுசாரிகளும் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். ஆனாலும் இது ‘‘டூ லேட்தான்’’. காரணம் சொல்லி அடிப்பது மோடியின் பாணி – சொல்லாமல் அடிப்பது அமித்ஷா பாணி! இந்த கூட்டணி மலைகளை வேரோடு பிடுங்க
ியிருக்கிறது. ஆறுகளை வற்றச் செய்திருக்கிறது. ஆம் முடியாது என்ற உத்தரப் பிரதேசத்தை மீண்டும் 4 ல் 3 பங்கு மெஜாரிட்டியில் கைப்பற்றி இருக்கிறது. 2013 ல் திரிபுராவில் 2 சதவீத வாக்கு மட்டுமே பெற்ற BJP 2018ல் 43 சதவீத வாக்கு பெற்று 60க்கு 36 இடங்களில் வெற்றிபெற்ற அதிசயத்தை இந்த இரட்டையர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

சரி, சப்ஜெட்டுக்கு வருகிறேன். இந்தியா முழுதும் காவிமயம் ஆகிவரும் சூழ்நிலையில் தமிழகம் மட்டும் தனித்து நிற்பதும் அதுவும் தொடர்ந்து திராவிடக் கும்பல்கள் கையில் சிக்கித் தவிப்பதும் உண்மையில் மோடிகுழுவுக்கு பெரும் கவலை அளித்துவரும் விஷயம்தான். பாடம் புகட்ட தமிழையே ஆயுதமாக தமிழைப் பிழைப்பாக்கி, ௬௦ வருடமாக அரசியல் செய்து வரும் தி.மு.க கும்பலுக்கு எடுத்த ராஜதந்திரத்தை இப்போது தொடங்கி இருக்கிறார்கள்.
அமெரிக்காவிலே தமிழ் அதிர்கிறது. ஐ.நா சபையில் தமிழ் கர்ஜிக்கிறது.

போகின்ற மாநிலங்களில் எல்லாம் தமிழிலிருந்து மேற்கோள் காட்டுதல்கள்! ‘‘பரிட்சை சர்ச்சா’’ என்று பலமாநில மாணவ/ மாணவிகளிடையே பேசும் போதுகூட தமிழ் மூத்த மொழி, சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி அதை கற்க முடியவில்லையே என ஆதங்கப்படுகிறேன் என மோடியின் உள்ளார்ந்த பேச்சுக்கள்! தமிழகத்துக்கு வந்தபோது, குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வந்தபோது வேட்டி சட்டை சகிதமும், பின்பொரு தரம் நெற்றி முழுதும் சந்தனப் பட்டையுடன் கூடிய வேட்டி சட்டை உடுத்திய போஸ்! மோடியின் நெஞ்சார்ந்த தமிழ்ப்பற்றுக்கு சான்றுகள்!
இப்படி ஒவ்வொன்றாக அடுக்கிய செங்கற்கள் தமிழகத்தில் திராவிட மாயைக்கு எதிரான ஹிந்துத்துவத் தமிழ் மாளிகையை உருவாக்கி வருகிறது!  இதைப் பார்த்து அரண்டுபோன திமுக, மோடியின் தமிழ்ப்பற்றை பாராட்டிவிட்டு, தமிழ் தனது குத்தகை என்பதால், ஒரு சிறுகட்டு சரவெடியை மட்டும் மோடி மீது வீசிவிட்டு ஓடிவிட்டது. ஆம்! முடிந்தால் தமிழை ஆட்சி மொழி ஆக்கிக் காட்டுங்கள் என மோடிக்கு இவர்கள் ஒரு புது வேலை கொடுத்து விட்டு 60 ஆண்டுகளாக இவர்கள் ஏன் அதை செய்யத் தவறினார்கள் என நான் கேட்டுவிடக் கூடாது என்பதிலே கவனமாக இருக்கிறார்கள்!

1989 லிருந்து 22 ஆண்டுகாலம் மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது 35முறை அரசியல் சாஸனம் திருத்தப்பட்டது. அதில் ஒருமுறை கூட தமிழை தேசிய மொழியாக ஆக்க திமுகவால் முடியவில்லை!
இந்த திமுகவின் ‘‘போலிதமிழ் பாசத்தை’’ ‘‘உண்மை தமிழ் பாச’’ ஆயுதம் ஏந்தி மோடி சிதறடிக்க துவங்கிவிட்டார். இப்போது ஆட்டம் ஆரம்பம். சதுரங்கவேட்டை துவங்கியது.
2016ல் தமிழகத்தில் பாஜக பெற்ற ஓட்டு 2% 2021ல் தமிழகம் திரிபுராவை ‘‘Repeat’’ செய்யும்!

தமிழிலே யுத்தம் துவங்கினாய்!
தமிழாலே வெற்றி கொள்வாய்
தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில்
தயக்கமின்றி கலக்கச் செய்வாய்
தங்கத் தமிழ்த் தலைவன் மோடியே.