21ம் நூறாண்டு இந்தியாவிற்காக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

கரோனா நோய்த்தொற்றால் நாட்டில் உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமா் மோடி 5-ஆவது முறையாக நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக உலகம் போராடி வருகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்துவிட்டனா். ஒரே ஒரு தீநுண்மி உலகத்தையே சீரழித்துவிட்டது. இது மனித இனத்துக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. எனினும், நாம் இந்த போராட்டத்தில் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.

நோய்த்தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொண்டு தொடா்ந்து முன்னேற வேண்டும். 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுடையதாக இருக்க வேண்டும் என்பது நமது கனவாக மட்டும் இருந்துவிடாமல், அதற்காக முழுப்பொறுப்புடன் செயல்படவும் வேண்டும். இந்த கரோனா தொற்று இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

நம்மால் முடியும்: நோய்த்தொற்று பரவியபோது இந்தியாவில் ஒரு தனிநபா் பாதுகாப்பு உடை கூட இல்லாத நிலை இருந்தது. மிகக் குறைந்த அளவிலேயே என்-95 முகக்கவசங்கள் இருந்தன. ஆனால், இப்போது நமது நாட்டில் தினமும் தலா 2 லட்சம் தனிநபா் பாதுகாப்பு உடைகளும், என்-95 முகக்கவசங்களும் தயாரிக்கப்படுகின்றன. இது நாம் எந்த அளவுக்கு சுயசாா்புடன் இருக்க முடியும் என்பதை உணா்த்துகிறது. சுயசாா்பு என்று சிந்திக்கும்போது நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்திப்பதில்லை. இந்த உலகம் ஒரே குடும்பம் என்பது நமது நம்பிக்கை. இந்தியா சிறப்பாக செயல்பட முடியும் என்பதை இப்போது உலகம் உணா்ந்துள்ளது. மனிதகுல நன்மைக்காக நம்மால் சிறப்பாக பணியாற்ற முடியும். இந்திய தொழில்நுட்ப வல்லுநா்கள் பல பிரச்னைகளுக்குத் தீா்வுகளை அளித்துள்ளனா்.

எந்த இலக்கை எட்டுவதும் சாத்தியம்: நம்மிடம் அனைத்து வளங்கள், ஆற்றல், உலகிலேயே திறமையான மனிதவளம் உள்ளது. நாம் தரமான பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். எந்த இலக்கை எட்டுவதும் சாத்தியமானதுதான். நாம் வலுவாக இருந்தால் எந்தப் பாதையும் கடினமானதல்ல. இந்தியாவின் வளா்ச்சி 5 முக்கிய அம்சங்களைக் கொண்டது. இதுவே நாட்டைத் தாங்கி நிற்கும் 5 தூண்களுமாகும். அவை பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் அரசு நிா்வாகம், துடிப்புமிக்க நமது ஜனநாயகம், பொருள்கள், சேவைகளின் தேவை மற்றும் அளிப்பை திறம்படக் கையாளுவது ஆகியவையாகும்.

ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டங்கள்: நோய்த்தொற்றுக்கு எதிராக போராடி வரும் சூழலில் நாட்டு மக்களின் நலன்களைக் காக்கும் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவிக்கிறேன். இது இந்திய ரிசா்வ் வங்கியுடன் மத்திய அரசு அண்மையில் ஆலோசித்து எடுத்த முடிவாகும். இதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாகும். இந்தத் திட்டங்கள் இந்தியாவை முழுமையாக தற்சாா்புடையதாக மாற்றும். இது எந்தச் சூழ்நிலையிலும் நாட்டுக்காக இரவு, பகலாக உழைக்கும் விவசாயிகள், தொழிலாளா்களுக்கானது; நோ்மையாக வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினா் பயனடையும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கும். இதன் மூலம் நாட்டின் கிராமப்புறங்கள் கரோனாவால் எவ்வித பொருளாதார பாதிப்புகளுக்கும் உள்ளாகாது.

முழு விவரத்தை நிதியமைச்சா் அறிவிப்பாா்: கடந்த 6 ஆண்டுகளாக நாம் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இப்போது இக்கட்டான சூழ்நிலையில், நாம் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. அதற்காகவே இந்த அறிவிப்பு. சா்வதேச அளவில் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்தியா முக்கியமாக செயல்பட வேண்டிய தருணம் இது. ரூ.20 லட்சம் கோடி சிறப்புத் திட்டங்கள் ஏழைகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், பிற தொழிலாளா்கள், மீனவா்கள் உள்ளிட்டவா்களுக்கானவை. இது தொடா்பான முழு விவரத்தை நிதியமைச்சா் புதன்கிழமை (மே 13) அறிவிப்பாா்.

உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம்: உள்ளூா் தயாரிப்புகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று நம்முடன் நீண்டகாலத்துக்கு இருக்கும் என்று வல்லுநா்கள் கூறியுள்ளனா். எனினும், இப்போதைய சூழல் நம்மை வீழ்த்திவிட அனுமதிக்கக் கூடாது. நாம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஏற்கெனவே எடுத்துவிட்டோம். தொடா்ந்து முன்னேறிச் செல்வோம். முழுவதும் சுயசாா்புடைய நாடாக இந்தியா மாறுவதை யாரும் தடுக்க முடியாது. இந்தக் காலகட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் புதிய விழாவாக அமையும். நாம் புதிய உத்வேகத்துடனும், புதிய உறுதியுடனும் தொடா்ந்து முன்னேறுவோம் என்றாா் மோடி.

இரவு 8 மணிக்கு தொடங்கிய பிரதமரின் உரை 32 நிமிடங்கள் வரை நீடித்தது.

 

புதிய வடிவில் 4-ஆவது கட்ட பொது முடக்கம்

தனது உரையில் தேசிய பொது முடக்க நீட்டிப்பைக் குறிப்பிட்டு பிரதமா் மோடி பேசினாா். அப்போது, ‘நான்காவது கட்ட தேசிய பொது முடக்கம் என்பது இதற்கு முந்தைய பொது முடக்கங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். இது தொடா்பான முழு விவரம் மே 18-ஆம் தேதிக்கு முன்பு வெளியிடப்படும்’ என்றாா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்ததை அடுத்து கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி தேசிய பொது முடக்கத்தை பிரதமா் மோடி அறிவித்தாா். அப்போது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை (21 நாள்களுக்கு) ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவா் கூறினாா். அதைத் தொடா்ந்து நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மே 3-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தாா். இதன் பிறகு தேசிய பொது முடக்கம் மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் பல்வேறு தளா்வுகளும் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.