பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பாரதத்தில் நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) என்பது எண்ணிக்கை மட்டும் அல்ல; பாரத நாட்டின் ஒட்டு மொத்த கொள்கை உருவாக்க கட்டமைப்பின் முதுகெலும்பு இது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் கணக்கெடுக்கும் பணி 2026 ஏப்ரலில் துவங்கியது. நவீன தொழில்நுட்பம் / டிஜிட்டல் புரட்சியின் மூலம் சுய விவரப் பதிவு என்பது தற்போது நடைபெறும் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் சிறப்பு.
ஒவ்வொரு பாரத குடிமகனின் விவரங்களைப் பதிவு செய்வதால் தேசத்தின் மனித வளம், பன்முகத்தன்மை, சவால்கள், எல்லையற்ற ஆற்றல் இவற்றை மதிப்பிட முடிகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்பது வெறும் தரவுகளின் தொகுப்போ அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சடங்கோ அல்ல; அது தேசத்தின் வலிமை, தேசத்தின் திறன்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பு. இது தேசத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு ஒரு ஆற்றல் வாய்ந்த கருவி. 2047ல் வளர்ச்சியடைந்த (விக்சித்) பாரதத்தை உருவாக்கும் உன்னதமான இலக்குடன் நமது நாடு வேகமாக முன்னேறி வரும் இவ்வேளையில், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணி.
இன்றைய நவீன யுகத்தில், புள்ளியியலின் முக்கியத்துவம் உலக அளவில் போற்றப்படுகிறது. தற்போதைய யதார்த்தத்தையும், ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் வரையறுப்பதில் தரவுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றன. நம் அன்றாட வாழ்வில் தரவுகளின் முக்கியத்துவத்தை பற்றி நாம் பெரிதும் சிந்திப்பதில்லை. இருந்த போதும், அரசின் கொள்கை வடிவமைப்பு முதல் தேசிய வளர்ச்சி முன் முயற்சிகள் வரையும், மக்கள் நல திட்டங்களிலும், இந்தத் தரவு தான் அடிப்படை. இதே தரவுதான் ஆராய்ச்சிக்கும், பொருளாதாரத்தின் விரிவான கண்ணோட்டத்தைக் கட்டமைக்கவும் உதவுகிறது.
கால நடையில் கணக்கெடுப்பு
1872-க்கு முன் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் பொ.ஆ. மூன்றாம் அல்லது நான்காம் ஆயிரமாண்டிற்குள் ஒருவேளை அதற்கும் முன்பே கூட பாரதம் மிகவும் வளர்ந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இந்த நாகரிகத்தில் பெரிய மக்கள்தொகை நிறைந்த நகரங்கள், நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள், கோயில்கள், செங்கல் என பல்வேறு வசதிகள் இருந்தன. நமது வேதங்கள், குறிப்பாக ரிக்வேதம், மக்கள்தொகை குறைவாக இருந்ததையும், சிறிய கிராமங்களில் பரந்த பகுதிகளில் சிதறியிருந்ததையும் தெளிவுபடுத்துகிறது. சந்திரகுப்தரின் (பொ.ஆ.மு. 321−-297) ஆட்சிக் காலப் பதிவுகள், 7,00,000 வீரர்களைக் கொண்ட ஒரு நிரந்தரப் படை இருந்ததைக் குறிப்பிடுகின்றன. இந்தப் படையை தக்கவைத்துக் கொள்ள ஒரு கணிசமான மக்கள் தொகை அடிப்படை அவசியமாக இருந்திருக்கும். மேற்கூறிய உண்மைகளின் அடிப்படையில், பொது யுகத்துக்கு முன்பே பாரதம் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் தொகையைக் கொண்டிருந்தது என்ற முடிவுக்கு நிச்சயம் வரலாம். மேலும், மக்கள்தொகை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் முயற்சிகள் மிகப் பண்டைய காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டில், மாமன்னர் அசோகரின் அரசியல் நிர்வாகத்தின் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவரான கௌடில்யரால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற “அர்த்தசாஸ்திரம்”, வரிவிதிப்பு நோக்கங்களுக்காக மக்கள்தொகை தரவுகளைச் சேகரிப்பதை அரசுக் கொள்கையின் ஒரு அடிப்படைக் கோட்பாடாக நிறுவியது. இந்த நூல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பொருளாதார, விவசாய மக்கள்தொகை கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான முறை பற்றிய விரிவான விவரம் தருகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அதன் முக்கியத்துவம் பண்டைய காலங்களில் திறமையான ஆட்சிகளால் அங்கீகரிக்கப்பட்டது; இடைக்காலத்தில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது; இது நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அளவிலான அரசியல் நிலைத்தன்மை இல்லாத ஒரு காலகட்டம். இருப்பினும், பின்னர் ஒரு அரசு அமைப்பு உருவாக்கப்பட்டவுடன், துல்லியமான மக்கள்தொகை புள்ளிவிவரங்களுக்கான தேவை மீண்டும் வலுவாக உணரப்பட்டது. நாடு முழுவதையும் உள்ளடக்கிய முதலாவது விரிவான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1881-ம் ஆண்டில், ஒரே சீரான அடிப்படையில் நடத்தப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 1901-ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி / தொழில் சார்ந்த விரிவான பகுப்பாய்வும், வகைப்பாடும் இடம் பெற்றிருந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பின் நடைபெற்ற முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1951-ல். இந்தக் கணக்கெடுப்பின் அறிக்கை, அதற்கு முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகள் பின்பற்றியிருந்த முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. பாரத மக்கள் தொகையின் அளவு / கட்டமைப்பில், கடந்த காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கவும், அத்துடன் மக்களின் வாழ்க்கைத்தரம் சார்ந்த விளைவுகளை முன்னிலைப்படுத்தவும் நடந்த ஒரு முயற்சி இது.
டிஜிட்டல் கணக்கெடுப்பு
நமது கலாச்சாரம், நாகரிகத்தை, பண்புகளை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அதேசமயம், சமுதாயத்தின் பன்முகத் தன்மையையும் பாதுகாத்து வளப்படுத்த வேண்டும். தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் கட்டமைப்புக்களை தொடர்ந்து நவீனமாக்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக, மத்திய அரசு இந்தத் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் செயல்பட்டு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒரு புரட்சிகரமான முயற்சியாக, பாரதத்தில் முதல்முறையாக, முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாக மாற்றியமைத்துள்ளது. துல்லியமான திட்டமிடல், நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் சுலப நடவடிக்கை இவைதான் இதன் முதன்மை நோக்கம்.
செல்பேசி செயலிகள், ஆன்லைன் படிவங்கள் போன்ற அம்சங்கள் இந்த முயற்சிக்குத் தனித்துவம் வாய்ந்த மேம்பட்ட தன்மையை அளிக்கின்றன. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இனி வெறும் காகிதப் பதிவுகளுக்குள் மட்டும் அடங்கிவிடாது. மாறாக, ஒவ்வொரு தகவலும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் பாதுகாப்பாகவும், உடனடியாகவும், பயன்படுத்தும் நிலையில் இருக்கும். இதனால் கணிசமான அளவு நேரத்தை சேமிக்கலாம். அதிக நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றையும் இது உறுதி செய்யும். எந்தெந்தத் துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும், எந்தெந்தப் பகுதிகளுக்கு சிறப்புக் கவனமும் நலத் திட்டங்களும் தேவைப்படுகிறது என்பதையும், துல்லியமாக அடையாளம் காண்பதற்கு அரசுக்கு 2027 கணக்கெடுப்பு அவசியமாகிறது. 2011 கணக்கெடுப்பிற்குப் பின், நீண்டகால இடைவெளியில் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம். இது வெறும் கால இடைவெளியை நிரப்புவது மட்டுமின்றி, புதிய பாரதத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. தற்சார்புள்ள வலுவான நாடாக, டிஜிட்டல் உலகின் முன்னணி நாடாக, முன்னேற்றப் பாதையில் புதிய பாரதம் வீறுநடை போடுகிறது.
பேனாவும் இல்லை காகிதமும் இல்லை…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், கடந்த பத்தாண்டுகளில் பாரதம் டிஜிட்டல் புரட்சியின் முன்னோடியாகத் திகழ்கிறது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் எனும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் திசையில், டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் எந்தத் தரவும் சட்டரீதியாக முற்றிலும் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் கருதப்படும். எந்தச் சூழ்நிலையிலும் தனிப்பட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படமாட்டாது. மேலும், தரவைப் பாதுகாக்க பல அடுக்குகளைக் கொண்ட “சைபர் கவசம்” நிறுவப்பட்டுள்ளது; இது ஹேக்கிங் / அனுமதியற்ற நுழைவு இவற்றுக்கு எதிராகப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஒரு பாரதக் குடிமகனாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கு இப்படியெல்லாம் உதவுகிறது :
நலத்திட்டங்களுக்கு சிறந்த இலக்கு நிர்ணயம்
நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு
தேர்தல் நடைமுறையில் நியாயமான பிரதிநிதித்துவம்
பள்ளிகள், மருத்துவமனைகள், போக்குவரத்து போன்ற மேம்பட்ட பொது சேவைகள்
வணிகங்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் சிறந்த தயாரிப்புகள் / சேவைகளை வடிவமைப்பதற்கான வாய்ப்புகள்
கட்டுரையாளர்: P.I.B