அரபு நாடுகளில் சங்கப்பணி செய்த ராஜராஜன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, விவசாயப் பணியும் செய்து சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, ராஜராஜன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

 

கணேசன் – − சூடாமணி தம்பதியினருக்கு மகனாக, 1959 நவம்பர் 27ல் பெங்களூரில் பிறந்தார், ராஜராஜன் ஜி. இவர்களது பூர்வீகம் திருச்செங்கோடு. தந்தையார் சர்வே துறையில் வேலை பார்த்ததால், வருடந்தோறும் மாற்றல். அதனால் ஒவ்வொரு வகுப்பும், ஒவ்வொரு ஊரில் படித்தார். லால்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்தார். தாயார் இளமையிலேயே தேசபக்தியை ஊட்டி வளர்த்ததால், ஹிந்து மதம், பாரத பண்பாட்டின் மீது பற்று வளர்ந்தது.
ரசாயன பாடத்தில் ஆர்வம் அதிகம் இருந்ததால், 1980ல் பி.எஸ்சி. கெமிஸ்ட்ரியை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சேர்ந்து முடித்தார். 1981ல், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலையில் சேர்ந்தார். அங்கு ஹாஸ்டலில் தங்கி இருந்தபோது, ராஜேந்திரன் ஜி மூலம் சங்கத்தொடர்பு வந்தது. அவரது பேச்சு, அறிவு, செயல்களால் மதிப்பும் மரியாதையும் வளர்ந்து, அவர் அழைப்பின் பேரில் ஸ்ரீ குருபூஜை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார்.
பின்பு கனகராஜ் என்றொரு கம்யூனிஸ்ட் நண்பர் வேலையில் சேர்ந்தார். தற்போது மாநில அளவில், அவர் கட்சிப் பதவியில் இருக்கிறார். அவருடன் நெருங்கிப் பழகியதால், கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பல சந்தேகங்களை கனகராஜிடம் கேட்பார். அவரது பதில் இவருக்கு திருப்தியாக இருக்காது. அதே கேள்விகளை ராஜேந்திரன் ஜியிடமும் கேட்பார். திருப்திகரமான பதில் இருக்கும்.
ஒருநாள் ராஜேந்திரன் ஜி வீட்டில் அவரை சந்தித்து “நமது நாடு ஒரு காலத்தில் எவ்வளவு உயர்ந்திருந்தது. இப்போது இப்படி தாழ்ந்து விட்டதே! மீண்டும் அந்த உயர்ந்த நிலையை கொண்டுவர முடியாதா?” என கேட்டார். அதற்கு அவர் “கவலைப்படாதே ராஜா. நிச்சயம் மாற்றம் வரும். நாளை ஷாகாவுக்கு வா” என்றார். மறுநாள் (1986 செப்டம்பர்) ஷாகாவுக்குச் சென்றார். பத்மநாபன் ஜி, காசிநாதன் ஜி என்ற இரண்டு ஸ்வயம்சேவகர்கள் மலர்ந்த முகத்துடன் இவரை வரவேற்றார்கள். இப்படித்தான் சங்கம் அறிமுகம் ஆனது.
1986 டிசம்பரில், தூத்துக்குடி கொம்மடிக் கோட்டையில் ப்ராத்மிக், 1987ல், கரூரில் முதலாமாண்டு சங்கப் பயிற்சி முகாம், 1988ல், பெங்களூர் சென்னேனஹல்லியில் இரண்டாமாண்டு சங்கப் பயிற்சி முகாம், 1998ல், நாகபுரியில் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் முடித்தார்.
1988 ஆகஸ்ட் 19ல், முருகவேணி அம்மாளை திருமணம் செய்தார். அப்போது டாக்டர்ஜியின் நூற்றாண்டு விழா நேரம். பல கிராமங்களுக்குச் சென்று, குழு அமைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தினார். ஸ்பிக் நகருக்கு எதிரில், அன்றைய ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஸ்ரீ ரங்கசாமி தேவரும், இந்து முன்னணி தலைவர் ஸ்ரீ தாணுலிங்க நாடாரும் கலந்து கொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில், முள்ளக்காட்டில் இருந்து முத்தையாபுரம் வரை ஊர்வலம் ஏற்பாடாகி இருந்தது. சுமார் 200 ஆண்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தின் முன்னே இரண்டு பெண்கள் “ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்” என்ற பேனரை பிடித்துக்கொண்டு வந்தனர்‌. அதில் இவரது மனைவியும் ஒருவர்.
1992ல், தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ள நிவாரணப் பணி செய்து கொண்டிருந்தபோது, அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமியில் கரசேவைக்காக செல்லும் நபர்கள் முன் வரலாம் என ஒரு அழைப்பு வந்தது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கரசேவகர்கள் 123 பேரை அழைத்துச் செல்லும் பொறுப்பு ராஜராஜன் ஜிக்கு கொடுக்கப்பட்டது‌. கரசேவையில் கலந்து கொண்டதை, தனது வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறார்.
ராஜராஜன் ஜிக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. முக்கியமாக “ஏகாத்ம மானவ வாதம்”, “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” போன்ற புத்தகங்கள் அவருக்கு பல சந்தேகங்களை தீர்த்து வைத்தன. புத்தகங்களை சேகரிக்க ஆரம்பித்து, சுமார் 5,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே உருவாக்கி விட்டார்.
தூத்துக்குடியில் மண்டல் பௌத்திக் ப்ரமுக், தாலூகா பௌத்திக் ப்ரமுக், ஜில்லா பௌத்திக் ப்ரமுக் பொறுப்புகள் வகித்தபோது, 2002ல் குவைத் நாட்டில் வேலை வாய்ப்பு வந்தது. முஸ்லிம் நாட்டில் போய் வேலை பார்ப்பதா? என தயங்கினார். அப்போது ராஜேந்திரன் ஜி இவரது தயக்கத்தை நீக்கி, “நீ வேலையை ஏற்றுக் கொண்டு குவைத் நாட்டுக்கு போ, அங்கு உனக்கு நிறைய சங்க வேலைகள் இருக்கின்றன” என்று உற்சாகப்படுத்தினார்.
குவைத் சென்று, தமிழ் பேசும் நண்பர்களைக் கொண்டு ஷாகா துவக்கி, குவைத்தில் 18 வருஷம் பாஹ் பௌத்திக் ப்ரமுக், குவைத் ப்ராந்த பௌத்திக் ப்ரமுக், குவைத் ப்ராந்த கார்யவாஹ், அரபு நாடுகளின் க்ஷேத்ர பௌத்திக் ப்ரமுக் என பல பொறுப்புகளில் சங்கப்பணி செய்தார். 2, 3 மாதங்களுக்கொருமுறை தாயகம் வரும் வழியில், ஏதாவது ஒரு வளைகுடா நாட்டில், 2 நாள் சுற்றுப்பயணம் செய்துவிட்டு வருவார். தாயகம் வரும்போதெல்லாம் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் உள்ள (குவைத்தில் பணிபுரியும்) கார்யகர்த்தர்களின் குடும்பங்களைச் சென்று சந்திப்பார். விஸ்வ விபாக்கில் (வெளிநாடுகளில்) கோஷ் குழு உருவாக்க வேண்டி, முழு கோஷ் வாத்ய செட்டை வாங்கி குவைத்திற்கு கொண்டு சென்றார்.
2019 இறுதியில், மகள் சிந்துவின் சீமந்தத்திற்கு வந்து திரும்புவதற்கு 2 நாள் முன்பு, கோவிட் காரணமாக விமானங்கள் நிறுத்தப்பட்டதால், திரும்பிப் போக முடியவில்லை, தாயகத்திலேயே தங்கி விட்டார். அதன்பின் உத்தர் தமிழ்நாடு ப்ராந்த காரியகாரிணி சதஸ்ய, சஹ ப்ராந்த பௌத்திக் ப்ரமுக் என சங்கப்பணி செய்து வருகிறார். சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 2 வருட விஸ்தாரக்காக இருந்தார்.
இவருக்கு சிந்து, வத்ஸலா பாரதி என இரு மகள்கள். மூத்த மகளுக்கு ஸ்ரீ ராமகோபாலன் ஜியின் விருப்பப்படி, “சிந்து” என்று பெயர் வைத்தார். சங்க பிரார்த்தனையில் வரும் “வத்ஸலே மாத்ரூபூமே” என்ற பதத்தை வைத்து, “வத்ஸலா பாரதி” என இளைய மகளுக்கு பெயர் வைத்தார்.
வெளிநாட்டிலும், தாயகத்திலும் சங்கப்பணி செய்த ராஜராஜன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

 

 

அ. ஓம்பிரகாஷ்