பாரதத்தின் ஒட்டுமொத்த நன்மைக்கான சட்டம் ஹிந்து சமுதாயத்துக்கு ஏற்புடையதாக இருப்பது இயல்பு. காரணம் இது ஹிந்து நாடு. அதே சமயம் ஹிந்துக்களை உள், வெளி பிரச்சினைகள் முற்றுகையிடுகின்றன. ஹிந்துக்களை பாதுகாக்கும் சட்டம் என்று பார்த்தால் அரிதாகவே உள்ளது. பத்தாண்டுகளுக்கு மேலாக பாரதத்தை ஆள்வோர் ஹிந்துக்களை வஞ்சிக்கும் போலி மதசார்பின்மை பேசி ஆதாயம் தேடுவோர் அல்ல. பிறகு ஏன் ஹிந்துக்களுக்கு இந்த நிலை? ஹிந்துக்களை பாதுகாக்கும் சட்டம் எவை? சில எடுத்துக்காட்டுகள்:
1. மதமாற்றத் தடை சட்டம்: ஜனநாயக நாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை கொள்ளையிடப்படுவதை தடுக்கும் இந்தச் சட்டம் பல மாநிலங்களிலும் இயற்றப்பட்டு வந்தாலும், மாநில ஆட்சி மாறும்போது அதன் தலைவிதி என்ன ஆகும் என்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. அதுவும் தவிர நீதிமன்றத்தால் அடித்துத் தள்ளப்படும் சாத்தியமும் உண்டு. இப்படித்தான் 2002ல் ஜெயலலிதாவின் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு மத சுதந்திரச் சட்டம்’ பின்னர் மதமாற்றிகளின் எதிர்ப்பு காரணமாக, 2006ல் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. எனவே பாரத அரசியல் சாசன எதிர்பார்ப்பின்படி அகில பாரத அளவில் மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
2. பசுவதை தடை சட்டம்: சனாதன தர்மத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஹிந்து சமுதாயம் பசுவை கோமாதாவாக வழிபடுகிறது. ஹிந்துக்கள் (அதாவது 85 சதவீத பாரத பிரஜைகள்) வழிபடும் எல்லா தெய்வங்களும் பசுவிடம் கோயில் கொண்டிருப்பதாக சமய நம்பிக்கை நிலவும் நாடு இது.
விவசாயத்தின் வாயிலாக மண்ணுக்கும் பால் வளத்தின் வாயிலாக மக்களுக்கும் கோமாதாவின் பங்களிப்பு அபரிமிதமானது. ஹிந்துஸ்தானம் முழுவதும் செல்லுபடியாகும் பசுவதை தடை சட்டம் கோரி, 60 ஆண்டுகளாக ஹிந்துக்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான துறவிகள் சுதந்திர பாரத வீதிகளில் கோமாதாவுக்காக உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள்.
இன்று தமிழகத்தை ஆளும் த.வெ.க அரசு கவனத்திற்கு: தமிழ்நாட்டில் பசுவதை (பசு மற்றும் கன்று) செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1976-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்தி, மாநிலம் முழுவதும் எவ்வித விலக்கீடும் இன்றி (பக்ரீத் பண்டிகை உட்பட) பசுவதை உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மே 27 அன்று உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யும் என்று வதந்தி பரப்பப்படுகிறது. இது ஹிந்துக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் என்பதால், அந்த எண்ணத்தை விஜய் அரசு கைவிட வேண்டும்.