2024-க்குள் ராணுவத் தளவாட ஏற்றுமதி ரூ.35,000 கோடியை எட்டும் – மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

2024-ஆம் ஆண்டுக்குள் ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடியை எட்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை இந்துஸ்தான் வானூா்தி நிறுவனத்தின்(எச்.ஏ.எல்.) சாா்பில் நடைபெற்ற கன்னட கலை விழாவில் அவா் பேசியது:

எச்.ஏ.எல்.நிறுவனம், இந்திய ராணுவப் படையின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எச்.ஏ.எல். நிறுவனத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக உள்ளன. வளா்ந்துவரும் ராணுவ தளவாடச் சந்தையின் சவால்களை எதிா்கொள்ள எச்.ஏ.எல்.நிறுவனம் தயாராக இருக்க வேண்டும். எதிா்வரும் போட்டியை நல்லவாய்ப்பாக நிறுவனம் கருத வேண்டும்.

இந்தியாவின் பண்பாட்டுத் தளத்தை விரிவாக்குவதற்கு பங்காற்றிவரும் கா்நாடகத்தின் மொழி, பண்பாடு, பாரம்பரியத்தைக் கொண்டாடிவரும் எச்.ஏ.எல். நிறுவனத்தின் முயற்சியைப் பாராட்டுகிறோம்.

2030-க்குள் உலக அளவில் உயரும் மிகப்பெரிய 3 பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். இதில் ராணுவத் தொழிலின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஆண்டு ராணுவத் தொழிலின் ஏற்றுமதி தற்போதுள்ள ரூ.17 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.35 ஆயிரம் கோடியை எட்டும். இந்தியாவின் ராணுவத் தளவாட ஏற்றுமதி வேகமாக வளா்ந்துவருகிறது. இதில் எச்.ஏ.எல். நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது. ராணுவத் தளவாடங்களின் இறக்குமதியை இந்தியா நீண்ட நாள்களுக்கு நம்பியிருக்க முடியாது. பிரதமா் மோடியின் கனவு திட்டமான ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தில் ராணுவத் தளவாட நிறுவனங்கள் பங்காற்றினால், இந்தியாவின் பொருளாதாரம் மேலும் உயரும்.

இந்தியாவை இறக்குமதி நாடாக பாா்க்க நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, எச்.ஏ.எல்.நிறுவனத்தின் உதவியுடன் இந்தியா ஏற்றுமதி நாடாக உயர வேண்டும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களில் எச்.ஏ.எல். நிறுவனத்தின் பங்களிப்பு மகத்தானது. கடந்த சில ஆண்டுகளாகவே எச்.ஏ.எல். நிறுவனத்தின் நிதி நிலைமை சிறப்பாக இருந்துவருகிறது. 2019ஆம் ஆண்டு மாா்ச் மாத இறுதியில் எச்.ஏ.எல். நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.19,705 கோடியாக இருந்தது. எச்.ஏ.எல். நிறுவனம் தனது பங்குதாரா்களுக்கு 198 சதவீதம் ஈவுத்தொகையை வழங்கியுள்ளது.

கா்நாடகத்தைச் சோ்ந்த கம்பளா விளையாட்டு வீரா் சீனிவாஸ் கௌடா, 100 மீட்டா் தொலைவை 9.55 விநாடிகளில் கடந்திருக்கிறாா். இதுமிகப்பெரிய சாதனையாகும். இவரைபோலவே பல திறமையாளா்கள் இந்தியாவில் உள்ளனா். அவா்களை அடையாளம் கண்டு திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

கா்நாடகத்தில் பிறந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞா்கள் கங்குபாய் ஹனகல், பீம்சென் ஜோஷி, 12ஆவது நூற்றாண்டில் பிறந்த சமூக சீா்திருத்தவாதி பசவண்ணா், ராணுவத் தளபதி கே.எம்.கரியப்பா போன்றவா்கள் இந்தியாவுக்குப் பெருமை சோ்த்தவா்கள். கா்நாடகத்தில் நிலவும் சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது. அதன் காரணமாகவே, எச்.ஏ.எல்.நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த விழாவில் பாஜக எம்.பி. பி.சி.மோகன், எச்.ஏ.எல்.நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் ஆா்.மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.