பயங்கரவாதத்துக்கு நிதி – வங்கதேசத்தவர் குற்றவாளி

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்தது மற்றும் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதி உட்பட இருவரை, கோல்கட்டா நீதிமன்றம், குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.மேற்கு வங்க மாநிலம், புர்த்வானின் காக்ராகர் என்ற இடத்தில், 2014, அக்டோபரில், ஒரு வீட்டில் வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில், இருவர் பலியாகினர்.

இது தொடர்பாக, அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத் – உல் – முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரஹமத்துல்லா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முகமது புர்ஹான் ஆகியோரை, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, 2014ல் கைது செய்தது.என்.ஐ.ஏ., அதிகாரிகள் பதிவு செய்த எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், 2018ல், அவர்கள் மீது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்தது மற்றும் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ரஹமத்துல்லா மற்றும் முகமது புர்ஹான் இருவரையும் குற்றவாளிகள் என, கோல்கட்டா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விபரம், அடுத்த மாதம், 17ல் அறிவிக்கப்படும் என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.