1857ல் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு

பாரதத்தின் முதல் சுதந்திரப் போராட்டமாகக் கருதப்படும் 1857 எழுச்சிக்கு முன்னோடியாக 1806 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சி அமைந்தது. 1857 போராட்டத்திற்கு 51 ஆண்டுகளுக்கு முன்பே, வேலூர் கோட்டையில் பாரத சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டனர். 1801 முதல் 1806 வரை, ஆங்கிலேய அரசு ராணுவத்தில் பல புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. ஹிந்து சிப்பாய்கள் நெற்றியில் சமயச் சின்னம் அணியக் கூடாது, மீசை மற்றும் தாடியை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் சிலுவை குறியீடு கொண்ட தலைப்பாகை அணிய கட்டாயப்படுத்தப்பட்டதுடன், துப்பாக்கித் தோட்டாக்களில் பசு மற்றும் பன்றிக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகப் பரவிய தகவல்கள் ஹிந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களின் மத உணர்வுகளை கடுமையாகப் புண்படுத்தின.
இதனால் சிப்பாய்கள் மத்தியில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கோபம் அதிகரித்தது. வேலூர், மைசூர் மற்றும் ஹைதராபாத் பகுதிகளைச் சேர்ந்த பாரதத்தின் சிப்பாய்கள், 1806 ஜூலை மாதம் ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்கத் திட்டமிட்டனர். ஜூலை 10ஆம் தேதி, வேலூர் கோட்டையில் கிளர்ச்சி வெடித்து, கர்னல் செயின்ட் ஜான் ஃபான்கோர்ட், கர்னல் மெக்கெராஸ், மேஜர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பல ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பாரத சிப்பாய்கள் வேலூர் கோட்டையில் பாரதத்தின் கொடியை ஏற்றி, கோட்டையை கைப்பற்றினர். பின்னர் ஆற்காட்டிலிருந்து வந்த பிரிட்டிஷ் படைகள் கிளர்ச்சியை கொடூரமாக அடக்கினாலும், இந்தப் புரட்சி பாரதியர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்ற முடிவை ஆங்கிலேயர்களிடம் ஏற்படுத்தியது. இதனால் வேலூர் புரட்சி 1857 சுதந்திரப் போரின் முதல் விதையாகக் கருதப்படுகிறது.
1857ஆம் ஆண்டு நடைபெற்ற பாரத சுதந்திரப் போராட்டத்தை, பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் “சிப்பாய் கலகம்” என்று மட்டுப்படுத்தினாலும், அது உண்மையில் நாடு முழுவதும் பரவிய மக்களின் எழுச்சியாகும். இந்தப் போராட்டத்தில் ஜாதி, மதம், மொழி வேறுபாடுகளை மறந்து பொதுமக்கள், சிப்பாய்கள், சமயத் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நானாசாகிப் பேஷ்வா எழுதிய கடிதங்களும், தென்னக மக்களிடம் விடுத்த அழைப்புகளும் தமிழகத்திலும் சுதந்திர உணர்வைத் தூண்டின.
1857–1858 காலகட்டத்தில், ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டு அந்தமான் மற்றும் திமோர் போன்ற இடங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்தமான் சிறைகளுக்கு அனுப்பப்பட்ட 800 பேரில், சுமார் 250 பேர் தென்னகத்தைச் சேர்ந்தவர்கள்; அதிலும் 230 பேர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தமிழகத்தின் முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.
1857 போரின் போது, சென்னை மாகாணம் முழுவதும் கிளர்ச்சி மனப்பான்மை பரவியிருந்தது. சென்னை நகரம் பிரிட்டிஷ் எதிர்ப்பின் முக்கிய மையமாக விளங்கியது. சுல்தான் பகக்ஷ் உள்ளிட்ட புரட்சியாளர்கள் செங்கல்பட்டு பகுதிக்குச் சென்று அருணகிரி மற்றும் கிருஷ்ணா போன்ற உள்ளூர் தலைவர்களுடன் இணைந்து, மக்களிடையே சுதந்திர உணர்வை வளர்த்தனர். அவர்கள் தந்திக் கம்பிகளை வெட்டவும், ஐரோப்பியர்களுக்கு எதிராக எழுச்சி கொள்ளவும் மக்களைத் தூண்டினர். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் பிரிட்டிஷ் எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டியதற்காக குலாம் கோஷ் மற்றும் ஷேக் மன்னு கைது செய்யப்பட்டனர். பக்கீர், பைராகி, பண்டாரம் போன்ற நாடோடி சமயத் தலைவர்கள் மீது ஆங்கிலேய அரசு தீவிர கண்காணிப்பு வைத்தது. புரட்சிகர சிந்தனைகளைப் பரப்பிய பலர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
பாண்டிச்சேரியிலும் 1857 போராட்டத்தின் தாக்கம் தீவிரமாக உணரப்பட்டது. பிரெஞ்சு ஆட்சியாளர்கள் கூட, பாரதத்தில் ஏற்பட்ட புரட்சி சூழ்நிலையால் அச்சமடைந்து, ஆயுதங்கள் மற்றும் ராணுவ உதவிகளை பிரிட்டிஷ் அரசிடம் கோரினர். சென்னை மாகாண அரசு பிரெஞ்சு நிர்வாகத்திற்கு துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் போர்த் தளவாடங்களை வழங்கியது. இதனால் பாண்டிச்சேரியில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் பதற்றமான சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடலூர், தஞ்சாவூர், வடஆற்காடு, ராணிப்பேட்டை, வேலூர், சேலம், மதுரை மற்றும் கோவை போன்ற பகுதிகளிலும் கிளர்ச்சி உணர்வு பரவியிருந்தது. கடலூரில் ராஜதுரோக பேச்சுக்களுக்காக பலர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூரில் ஷேக் இப்ராஹீம் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். வடஆற்காட்டில் சையத் குஸா உள்ளிட்டோர் பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டையில் மக்கள் மத்தியில் கிளர்ச்சி மனப்பான்மை அதிகரித்ததால், ஆயுதங்கள் வைத்திருந்தவர்களை அப்புறப்படுத்த பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. வேலூரில் 1858ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் கேப்டன் ஹார்ட் மற்றும் ஜெயிலர் ஸ்டாபோர்டு கொல்லப்பட்டனர். சேலத்தில் “பாரத வீரர்கள் விரைவில் வருவார்கள்” என்ற செய்திகள் மக்களிடையே பரவியதால், சுதந்திர உணர்வு அதிகரித்தது. வெளிநாடுகளிலிருந்து வந்த புரட்சியாளர்கள் மக்களிடையே கிளர்ச்சியைத் தூண்டினர்.
மதுரையில் காவல்துறை சிப்பாய் ராமசுவாமி மற்றும் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த முராத்கான் ஆகியோர் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர். கோவையில் முல்பகல்லு சுவாமிஜி மக்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உரையாற்றினார். அவர் கைது செய்யப்பட்டபோது, நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெட்ராஸ் ராணுவத்தின் 8ஆம் லைட் குதிரைப்படை வீரர்களும், 1857 போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசுக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பழைய ஊதியம் மற்றும் பயணப்படி சலுகைகளை கோரி அவர்கள் உத்தரவுகளை ஏற்க மறுத்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில், வங்காளத்திற்கு அனுப்பப்பட இருந்த இந்தப் படைப்பிரிவு பிரிட்டிஷ் அரசின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தது. இதனால் பல பாரத அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்; படைப்பிரிவே கலைக்கப்பட்டது.
இவ்வாறு 1857 சுதந்திரப் போராட்டம் வடபாரதத்துக்குள் மட்டுப்படாமல், தமிழகத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வேலூர் புரட்சியிலிருந்து தொடங்கி சென்னை மாகாணம் முழுவதும் பரவிய இந்த எழுச்சி, பாரத விடுதலை வரலாற்றில் தமிழகத்தின் முக்கியப் பங்களிப்பை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

கட்டுரையாளர்: சி.எஸ்.ஐ.எஸ், சென்னை