18 ஆண்டுகளாக சட்ட விரோத செயல்பாடு எப்படி? சுரங்கத்துறைக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

மதுரை வாடிப்பட்டியில், 18 ஆண்டுகளாக சட்ட விரோத கல்குவாரியை செயல்பட அனுமதித்தது எப்படி என, புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை வாடிப்பட்டி அருகே, அரசு தடை விதித்துள்ள கல்குவாரியில், 18 ஆண்டுகளாக, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், முறைகேடாக கனிம வளங்களை வெட்டி விற்று வருவது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரிய வந்தது.

சட்டவிரோத கல்குவாரி அமைத்துள்ளதால், விவசாயம் செய்ய முடியவில்லை; வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த செய்தி, கடந்த ஜூலையில் ஊடகங்களில் வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

புவியியல் மற்றும் சுரங்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், 5,439.88 கன மீட்டர் கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது; சிலருக்கு குவாரி குத்தகை வழங்கப்பட்டுள்ளது என, கூறப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் அதிக அளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டாலும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாடிப்பட்டி தாலுகாவில், இந்த வழக்கில் கூறப்பட்ட சர்வே எண்ணில், குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என, அரசு தரப்பில் கூறப்பட்டுஉள்ளது.

எனவே, இப்பகுதியில் குவாரிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை, சுரங்கத் துறை சரிபார்க்க வேண்டும். அனுமதியின்றி குவாரி செயல்பட எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது பற்றி, சுரங்கத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் மார்ச், 6ல் நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.