110 கிலோ மீட்டர் ஓடி 12 ஆலயங்கள் தரிசனம், குமரியில் பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் தொடங்கியது- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 110 கி.மீ. தொலைவு சுற்றளவுக்குள் இருக்கும் முக்கியமான 12 சிவாலயங்களை 24 மணி நேரத்துக்குள் ஓடியே சென்று தரிசனம் செய்யும், `சிவாலய ஓட்டம்’ என்ற பாரம்பரியமான நிகழ்வு, திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இந்நிகழ்வில் ஆண்டுதோறும் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து இந்நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. காவி உடை தரித்த பக்தர்கள், கையில் விசிறி, தோளில் விபூதி பையுடன் `கோவிந்தா, கோபாலா’ என்ற பக்தி முழக்கமிட்டபடி சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிவாலய ஓட்டத்தில் இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 2-வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் சிவனை தரிசித்த பின்னர், அங்கிருந்து திற்பரப்பு வீரபத்திர சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட்டனர்.

அதைத்தொடர்ந்து, திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்னிபாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோயில் ஆகியவற்றில் தரிசனம் செய்யும் பக்தர்கள், திருநட்டாலம் சங்கர நாராயண சுவாமி கோயிலில் சிவாலய ஓட்டத்தை இன்று நிறைவு செய்கின்றனர். அங்கு சிவராத்திரியான இன்று கண்விழித்து விடிய, விடிய சிவனை வழிபடுகின்றனர்.

ஓட்டமாக செல்ல முடியாத ஏராளமானோர் வாகனங்களில் சென்று 12 சிவன் கோயில்களையும் வழிபடுகின்றனர். அத்துடன், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 12 சிவாலயங்களையும் இணைத்து சிறப்பு பேருந்துகளும் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.