விஎச்பி அமைத்த மாதிரி வடிவத்தில் ராமர் கோயில் – பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதிகாரியிடம் பணி ஒப்படைப்பு

பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) வடிவமைத்த மாதிரியில் அயோத்தியின் ராமர் கோயில் அமையும் எனத் தெரிகிறது. இதன் கட்டுமானப் பணி பொறுப்பு பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதிகாரியான நிருபேந்திர மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ராமர் கோயில் கட்டப்பட்ட உள்ளது. இதற்காக மத்திய அரசு அமைத்த ‘அறக்கட்டளையான ‘ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட்(ஸ்ரீ ராமஜென்ம பூமி புனிதப்பகுதி அறக்கட்டளை)’ நேற்று முன்தினம் டெல்லியில் கூடியது. இதில், அறக்கட்டளையின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் தலைவராக, அயோத்தியில் ராமர் கோயிலுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்திய விஎச்பியின் ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவரான நிருத்திய கோபால்தாஸ் அமர்த்தப்பட்டுள்ளார். விஎச்பியின் துணைத்தலைவரான சம்பத் ராய், பொதுச்செயலாளராகவும், பொருளாளராக சுவாமி கோவிந்த் தேவ் கிரியும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அறக்கட்டளை சார்பில் அதைக் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கோயில் கட்டமைப்புபணிக் குழுவின் தலைவராக பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா அமர்த்தப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர் உ.பி.யை சேர்ந்தவர். அறக்கட்டளையின் செயல் தலைவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.பராசரன் வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்பது முக்கிய முடிவுள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இக்கூட்டத்தில் வெளியான தகவல்களின்படி, ராமர் கோயிலானது விஎச்பி வடிவமைத்த மாதிரியை போல் அமைக்கப்படும். இதன் உயரம் மட்டும் அதிகரிப்பதால் அதற்கேற்றவாறு சிறிய அளவில் மாற்றம் செய்யப்படும். இந்தியாவிலேயே பெரிய கோயிலாக ராமர் கோயில் பிரம்மாண்டமாக அமைய உள்ளது. இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கிடைத்த 2.77 ஏக்கருடன் அதைச் சுற்றி தற்போது மத்திய அரசின் வசம் உள்ள 67 ஏக்கர் நிலமும் கோயிலுக்காகப் பெற முயற்சிக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. கோயில் கட்டும் பணிக்காக அயோத்தில் சர்ச்சையில் சிக்கிய நிலத்தில் அமைந்துள்ள குழந்தை வடிவ ராமர் சிலையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி வைக்கவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதன் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அரசு அமைத்துள்ள அறக்கட்டளையில் தங்களையும் சேர்க்க வேண்டும் என அயோத்தின் பல்வேறு மடாதிபதிகள் போர்கொடி உயர்த்தி உள்ளனர். கடந்த வருடம் தீர்ப்பு வெளியானது முதல் வலியுறுத்தி வருவர்களில் சிலர், உ.பி. முதல்வரும் கோரக்பூரின் கோரக்நாத் கோயில் மடத்தின் பொறுப்பாளருமான யோகி ஆதித்யநாத்தையும் சேர்க்க கோரியுள்ளனர். தம் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில், அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் சில அயோத்தி சாதுக்கள் எச்சரித்துள்ளனர்.

உ.பி.யின் மதுராவிலுள்ள கொஹரா தாலுகாவின் பர்ஸானா கிராமத்தில் ஜூன் 11, 1938-ல் பிறந்தவர் நிருத்திய கோபால்தாஸ். தன் 12 வயதில் துறவறம் பூண்டு அயோத்திக்கு வந்தவர், வாரணாசிக்கு சென்று சம்ஸ்கிருதம் பயின்றதில் தங்கப்பதக்கம் பெற்றார். விஎச்பியின் ராமர் கோயிலுக்கானப் போராட்டத்தில் துவக்கம் முதல் முக்கிய இடம்பெற்ற நிருத்திய கோபால்தாஸ், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் துணைத் தலைவராக இருந்தார். அதன் தலைவரான மஹந்த் பரமஹன்ஸ் ராமச்சந்திரதாஸின் மறைவிற்கு பின் அப்பதவி நிருத்திய கோபால்தாஸுக்கு கிடைத்தது. 1986-ல் பூட்டியிருந்த பாபர் மசூதியை பூஜைக்காக திறக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் நிருத்திய கோபால்தாஸ் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய, மாநில அரசுகளை எச்சரித்தார். இதன் விளைவாக அரசு பணிந்தது. பிப்ரவரி 1, 1986-ல் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு பூட்டை திறந்து பூஜைகள் நடக்க அனுமதித்தது.