11 லட்சம் பக்தர்கள் கேதார்நாத் வருகை

கடந்த 126 நாட்களில் சுமார் பதினொரு லட்சம் பக்தர்கள் கேதார்நாத்துக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். இது முந்தைய காலங்களில் சென்ற யாத்ரிகர்களின் எண்ணிக்கை அனைத்தையும் விட அதிகமாகும். கடந்த 2019ம் ஆண்டில் பத்து லட்சம் யாத்ரிகர்கள் சென்றதே இதுவரை இருந்த சாதனை எண்ணிக்கையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த யாத்திரை பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் யாத்திரை முறையாக நடத்தப்படுகிறது.  இந்த யாத்திரை முடிவடைய இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளதால், கேதார்நாத் யாத்திரை செல்வோர் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் மயூர் தீட்சித், “ஆரம்ப காலத்தில் அதிக மக்கள் கூட்டம் மாவட்ட அதிகாரிகளுக்கு சில நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தியது. இருப்பினும் தொடர் மேம்பாட்டு நடவடிக்கைகளால் அனைத்தும் விரைவில் கட்டுக்குள் வந்தன. ருத்ரபிரயாக் முதல் கேதார்நாத்வரை ஐநூறுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பயண ஏற்பாடுகள் தொடர்பான துறைகளும் தொடர்ந்து தங்கள் பணியில் கவனம் செலுத்தி வருகின்றன. யாத்ரிகர்களின் பயணத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தித்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து ஹோட்டல் லாட்ஜ்களும் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏராளமான பயணிகள் வருகின்றனர்” என தெரிவித்தார்.