1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு சர்க்கரை மானியம்

நாடு முழுவதும் 1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கிலோ சர்க்கரைக்கு மத்திய அரசு ரூ.18.50 மானியம் வழங்குகிறது. இந்நிலையில் இந்த மானியத்தை மார்ச் 2026 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 1.89 கோடி குடும்பங்கள் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்புதல் 15-வது நிதிக்குழு காலத்தில் (2020-21- 2025-26) ரூ.1,850 கோடிக்கும் அதிகமான பலனை நீட்டிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற பெயரில் ஏழைக் குடும்பங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே இலவச உணவு தானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 80 கோடி குடும்பங்கள் பலன் அடைந்து வருகின்றன.
இத்துடன் ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் கடலை பருப்பும் கூட்டுறவு கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுவரை 3 லட்சம் டன் பாரத் பருப்பும், 2.4 லட்சம் டன் பாரத் ஆட்டாவும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.